சோஃபிங்கன் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் (Aargau) கன்டோனில் உள்ள சோஃபிங்கன் (Zofingen) ரயில் நிலையத்தில் இடம்பெற்ற சோகமான விபத்தில் 17 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளான். சரக்கு ரயில் வண்டி மீது ஏற முயன்ற போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்த அவனுக்கு எந்த உதவியும் பலனளிக்கவில்லை.
2026 ஜனவரி 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, இரண்டு சமவயதுடைய நண்பர்களுடன் அந்த இளைஞன் சோஃபிங்கன் ரயில் நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு, ஒரு ரயில் பாதையை கடந்த பின்னர், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் ஒரு வண்டி மீது அவன் ஏறியுள்ளார். அந்தச் சமயத்தில் மின்சாரம் பாயும் மேல்நிலை மின்கம்பிக்கு மிக அருகில் சென்றதால், அவனுக்கு கடுமையான மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால், அவன் வண்டியிலிருந்து கீழே விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3.15 மணியளவில் நண்பர்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசாரும் அவசர மருத்துவ சேவையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் சென்றடைந்த போது இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், சம்பவத்தின் துல்லியமான சூழ்நிலைகள் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த துயர சம்பவம், ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின்கம்பிகள் அருகே நிலவும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. எங்கும் காணப்படும் எச்சரிக்கை பலகைகளை அலட்சியப்படுத்துவதும், ரயில் வண்டிகள் அல்லது மின்கம்பி தூண்கள் மீது ஏறுவதும் மிகக் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
© Kapo AG