Coop கடை முன்னிலையில் கைவிடப்பட்ட 15,000 பிராங் பணம் : கண்டெடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பேர்ன் மாகாணத்தின் (Tramelan) ற்றமெலாந் பகுதியில் வசிக்கும் 77 வயதான ஜினெட், செவ்வாய்க்கிழமை மதியம் Coop சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு வண்டியில் யாரோ மறந்துவிட்ட ஒரு சிறிய பயணப்பையை கவனித்தார். அதை திறந்து பார்த்த அவர், உள்ளே பல ஆயிரக்கணக்கான நோட்டுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் எண்ணிக்கையையும் பார்க்காமல், உடனே உரிமையாளரின் மனநிலையில் தன்னை வைத்து நினைத்து, அந்தப் பணத்தை நேரடியாக போலீஸிடம் ஒப்படைத்தார். பின்னர் தான் அதில் மொத்தம் 15,000 பிராங்குகள் இருந்தது தெரியவந்தது. “நான் என் பெயரைச் சொல்லாமல் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டேன்,” என ஜினெட் கூறுகிறார்.
ஆனால் மறுநாள் போலீஸ் வீட்டுக்கு வந்து பரிசாக உரிமையாளரிடமிருந்து வந்த தொகையை கொடுக்கும்போது, அவர் மனம் உடைந்தார். “உரிமையாளர் சொல்லியது இதுதான்: ‘30 பிராங்க் கொடுங்கள், போதும்.’” என போலீஸ் அதிகாரி கூறியதாக ஜினெட் பகிர்ந்தார். “இது எனக்கு உண்மையிலேயே அவமானமாக இருந்தது,” என அவர் வருத்தப்பட்டார்.

இயல்பாக, சுவிஸ் நாட்டில் பொருள் அல்லது பணம் ஒன்றை கண்டுபிடித்து ஒப்படைக்கும் நபருக்கு பொதுவாக 10% வரை பரிசாக வழங்குவது ஒரு வழக்கமான நடைமுறை. ஆனால், ஜினெட் அதை ஏற்கவே மாட்டேன் என்றாலும், 30 பிராங்க் கொடுத்தது அவமானமாக இருந்ததாக கூறுகிறார். “நான் உடனே ஒப்படைத்ததன் காரணம், உரிமையாளர் அவ்வளவு பெரிய தொகையை இழந்ததால் ஏற்படும் பதட்டம் அவருக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான்.”
பேர்ன் காவல்துறை இதை உறுதிப்படுத்தி, “சுவிஸ் சிவில் சட்டம் 722ன் படி, இழந்த பொருளை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ‘நியாயமான பரிசு’ கிடைக்க உரிமை உண்டு. ஆனால் சட்டத்தில் எந்த சதவீதமும் குறிப்பிடப்படவில்லை. பரிசு கொடுப்பது உரிமையாளரின் தீர்மானம்,” என்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பலரும் ஜினெட்டின் நேர்மையைப் பாராட்டியும், உரிமையாளரின் செயலால் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.
கண்டுபிடித்த பணத்தைத் திருப்பித் தருவது போன்ற நற்பண்புகள் குறைந்து வரும் காலத்தில், இந்தச் சம்பவம் “நேர்மைக்கு சரியான மதிப்பு இன்னமும் கிடைக்கிறதா?” என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளது.