ஸ்விட்சர்லாந்தில் நெடுஞ்சாலை விக்னெட் விலையை இரட்டிப்பாக்க திட்டம்
ஸ்விட்சர்லாந்தில் முன்னணி சனநாயகக் கட்சி (Centre Party) சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Martin Candinas (மார்டின் கந்தினாஸ்), மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கான நெடுஞ்சாலை விக்னெட்டின் (Vignette) விலையை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, புதிய சட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.
தற்போது 40 சுவிஸ் ஃபிராங்காக உள்ள விக்னெட் விலை கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரே விலையில் உள்ளது. ஆனால் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கட்டமைப்பு, பராமரிப்பு செலவுகள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை கருத்தில் கொண்டு விலையை 80 ஃபிராங்காக உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
நெடுஞ்சாலை விக்னெட்
இது பொதுமக்களுக்கு பாதிப்பாக இருக்காது என்றும், இதே நேரத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 சென்ட் குறைக்கும் திட்டமும் இணையாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாகன ஓட்டுநர்களுக்கு செலவுசுமை சமனாகும்.
மேலும், விக்னெட் விலை உயர்வால், வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் குறையும் என நம்பப்படுகிறது. இது கோத்தார்ட் சுரங்கம் (Gotthard Tunnel) போன்ற வழித்தடங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த நவீன தீர்வுகள் போக்குவரத்து சிக்கல்களை குறைத்து, நெடுஞ்சாலை பராமரிப்பு செலவுகளை சமாளிக்க உதவும் என்றும், இது ஒரு நீண்டகால முதலீடாக செயல்படும் என்றும் Martin Candinas வலியுறுத்துகிறார். இந்த திட்டம் சட்டமாகும் வாய்ப்பு குறித்து விரைவில் ஸ்விஸ் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.