பாகிஸ்தான் விமானப்பாதையை தவிர்க்கும் சுவிஸ் விமான சேவை நிறுவனம்
காஷ்மீர் பிராந்தியத்தில் மோசமாகும் பதற்ற நிலை காரணமாக, சுவிஸ் விமான சேவை நிறுவனமான Swiss International Air Lines (SWISS) பாகிஸ்தான் விமானப்பாதையை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்கும் என அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஆசியாவை நோக்கிய சில விமானப் பயணங்களை பாதிக்கும் என்றும், குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லி, சிங்கப்பூர், மற்றும் பாங்கொக் செல்லும் மற்றும் வரும் விமானங்களுக்கு பயண நேரம் நீடிக்கப்போகிறது என SWISS Air Lines நிறுவனத்தின் பேச்சாளர் மைக் ஃபுல்ரொட் தெரிவித்தார்.

இதே கட்டுப்பாடுகள், SWISS Air Lines நிறுவனத்தின் தாய் நிறுவமான Lufthansa Group உடனான மற்ற விமான சேவைகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பாதை மாற்றம் காரணமாக பயணிகள் தொடர்புடைய இணைப்புப் பயணங்களைத் தவறவிட்டால், அவர்கள் இலவசமாக மாற்று விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வான் பரப்பினை தவிர்க்கும் காலம் எத்தனை நாட்கள் தொடரும் என்பதைத் தெளிவாகக் கூற முடியாத நிலையில் இருக்கின்றோம் சுவிஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு எங்கள் நிறுவத்தின் முதன்மை முன்னுரிமையாகும் எனவும் சந்தர்ப்ப வளர்ச்சிகளை நாங்கள் அப்பகுதியில் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம்,” எனவும் SWISS நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் திகதி காஷ்மீரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், பெரும்பாலானவர்கள் இந்திய சுற்றுலாப்பயணிகள் எனக் கூறப்படும் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்புடையதாக இந்திய அரசு குற்றம் சாட்ட, இஸ்லாமாபாத் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பல தசாப்தங்களாக சிக்கலாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சினை, இந்த தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் கடும் முரண்பாட்டு நிலையை உருவாக்கியுள்ளது.
(c) Keystone SDA