தாயகத்தின் அனுபவத்தடங்களை ஓவியங்கள் மூலம் காட்சிப்படுத்தும் பிரவாகினி
ஈழதேசத்தில் இளைய தலைமுறை நெருக்கடி மிகுந்த போரியல் வாழ்க்கை முறைக்குள் வாழ்ந்த காலத்தில் தமது வாழ்வியலையும், கற்றல் முறைமைகளையும் இடைவிடாது முன்னெடுத்து வந்தமையை இலகுவில் யாராலும் மறந்துவிட முடியாது. தாயக தேசத்தின் அனுபவத் தடங்களை பல கலைப் படைப்பாளர்கள் ஆத்மார்த்த ரீதியாய், நிதர்சனக் கோப்பாய் படைப்புகள் ஊடாக பகிர்ந்து வருவதென்பது பெரிதும் வரவேற்கத் தக்கதாகும்.
அந்த வகையில் வலியை வலிமையாக்கி தனது ஓவிய திறனூடாக தூரிகை கொண்டு தத்துருவமாக காட்சிப்படுத்தி வருகிறார் சுவிற்சர்லாந்தில் வாழும் வளர்ந்து வரும் ஓவியர் சாயம் தாரா பிரவாகினி அவர்களின் ஓவியப் பயணத்தோடு இவ்வாரம் SwissTamilTv இன் ஆளுமைகள் பகுதியோடு இணைவோம்….
தாயகத்தில் வரலாற்றுத் தலங்கள் அமையப்பெற்ற மாவட்டங்களில் ஒன்றான மன்னாரில் 1989ஆம் ஆண்டு திரு.திருமதி.தர்மலிங்கம் ஜெசிந்தா மண இணையருக்கு தாரா பிரவாகினி அவர்கள் மகளாகப் பிறந்தார். இவரது தாயார் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் தந்தையார் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தனர்.
பிரவாகினி தனது ஆரம்பக் கல்வியை யாழ் திருநெல்வேலியில் கற்கலானார். இடைநிலைக் கல்வியை திருகோணமலை புனிதமரியாள் தேசிய பாடசாலையிலும் உயர்கல்வியை மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார். இடைநிலைக் கல்லூரிக் காலங்களில் அழகியல் பாடத் தெரிவில் சித்திர பாடத்தை தனது விருப்பப் பாடமாக தெரிவு செய்தார். இயல்பாகவே சித்திர பாடத்தில் ஆர்வத்தையும் பேரவாவையும் கொண்டிருந்த இவர் அதன் தொடர்ச்சியாக உயர்தர கலைப்பிரிவில் சித்திரத்தை ஒரு பாடமாக கற்கலானார்.
துரதிஸ்டவசமாக அதற்கான தனித்துவ ஆசிரியர் இல்லாமையால் சித்திர பாடத்தை தொடர முடியாமல் இருந்த நிலையில் உயர்தரப் பரீட்சைக்கு மூன்று மாதங்களே மீதமாக இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த திரு.லகுதாஸ் என்ற ஆசிரியர் மூலமாக விடுபட்ட பாட அலகுகளை நிறைவு செய்து அந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்று யாழ் பல்கலைக்கழத்திற்கு தெரிவானார். அங்கு கலை, வரலாற்றுப் பிரிவில் படிப்பதற்கான வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
இவரை இத்துறையில் ஈடுபடுத்த பெரிதும் துணைநின்றவர் வைத்திய கலாநிதி தாமோதரம்பிள்ளை சனாதனன் ஆவார்.

கலைகளை ஒவ்வொரு படைப்பாளிகளும் எப்படி எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அங்கு இவர் அறிந்துகொண்டார். அதன் பெறுபேறாக அங்கேதான் ஒரு படைப்பாளி தான்சார்ந்த துறையில் தனித்து நின்று தன்னம்பிக்கையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தன்னுள் வரித்துக் கொண்டு ஒரு ஓவியராக வேண்டுமென்ற ஆழ்மன அத்திவாரத்தை திடப்படுத்திக் கொண்டார். இவரது விடா முயற்சியால் ஓவியங்களை வரைவதற்கான பயிற்சிகளை தன்னார்வத்தோடு முன்னெடுத்தார்.
குரு நிலையில் உள்ளோர் எவரது கட்டுப்பாடுகளுமின்றி தனித்துவமாகவே இயங்கி தன்னுடைய சிந்தனா சக்திகளை முழுமையாக படைப்புகளுக்குள் புகுத்தி வரைகலைப் பணியை தொடர்ந்தவண்ணம் இருந்தார். இவ்வாறாக இருந்த காலப்பகுதியில் பல்கலைக்கழக கற்கைநெறியை நிறைவுசெய்த இவர் திருகோணமலை விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆறுவருடங்கள் ஆசிரியராக பணியாற்றினார்.
கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காலப்பகுதிகளில் தனது வாழ்வியல் தடங்கள், போர் வடுக்களின் வலிகள், பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட வலிகள், இயற்கையின் அனர்த்தங்கள், புராண இதிகாச வரலாற்றுத் தடங்கள் என்பவற்றை எதிர்கால சந்ததிக்கு படைத்தாகவேண்டுமென்ற பேரவா மேலெழ தன் எண்ணத்தில் உதயமான “சாயம் வரலாற்றுன் மீதான கழிவிரக்கம்” என்ற தலைப்பிலான கண்காட்சி ஒன்றை திருகோணமலை மண்ணில் ஏற்பாடு செய்து பத்து ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
இதில் இராவணதேசம், இராவணின் பத்துத் தலைகளும் அதன் சாம்ராட்சியங்களும் சித்தரிக்கப்படிருந்ததோடு சில வரலாற்று அடையாளங்களை ஓவியமாகப் படைத்து படைப்பாளியாக தன்னுடைய உளவியல்பட்டறிவுடன் தன் உள்ளக் கிடக்கைகளை முதன் முதலாக இக்கலைக் கூடத்தில் வெளிப்படுத்தி நின்றார். அன்று முதல் சாயம் பிரவாகினியாக அடையாளப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டார்.
இவரது இந் நிகழ்விற்கு * பிரதம விருந்தினராக திருமதி சரன்ஜா சுதர்சன் மகாணப் பணிப்பாளர், கிழக்கு மாகாணம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்.
* சிறப்பு விருந்தினர்களாக திரு.ந.விஜேந்தரன் ஓய்வுநிலை வலையக்கல்வி அலுவலர்.
திரு.ஆர்.நிமலரஞ்சன் பிரதிக்கல்விப் பணிப்பாளர், கிழக்குமாகாண கல்வித் திணைக்களம்.
* அறிமுக உரைகள் வைத்தியர் த. ஜீவராஜ் வைத்தியர் அ.சதீஸ்
கவிஞர் த.பவித்திரன்
திரு.கா.செந்தூரன்
ஆகியோர் நிழ்த்தினர். பல்துறைசார்ந்த ஆர்வலர்கள் கல்விசார் சமூகத்தினர் இளைய தலைமுறையினர் என இந்நிகழ்வில் பங்கேற்று இவரது ஓவியப் பணியூடான செய்திகளை, கடத்துதிறனை பார்வையிட்டு பாராட்டி உற்சாகப்படுத்தியமை மேலும் இப்பணியை தொடர பெரும் பங்காற்றி நின்றது என மகிழ்ந்தார்.
காலங்கள் கடந்து ஓட “சாயம் பிரவாகினியாக” அடையாளப்படுத்தப்பட்ட இவர் சுவிற்சர்லாந்து நாட்டிற்கு வாழ்நிலை கருதி வந்திருந்தாலும் தனது இடைவிடாத ஓவியப்பணியை தொடர்ந்தவண்ணமே இருந்தார். அவ்வாறாக தான் கண்முன்னே கண்ட போர்க்கால அவலங்கள், வன்கொடுமையின் தாண்டவங்கள், தமிழினத்தின் வாழ்வியல் வரலாறுகள், போர் எதற்காகத் தொடங்கியது அதற்கான காரணம் என்ன தமிழர்களின் அடையாளம் என்ன என்பவற்றை தன் தனிப்பட்ட முயற்சியூடாக ஓவியங்களாக்கி அத்தனையையும் ஒன்றாக்கி ஒரு கூடாரத்தின் கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் Kosmos கலைக்கூடத்தால் கடந்த 31.01.2025 அன்று Fedra rachouti (curator) அவர்களல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது “spiragli nel silenzio” எனும் தலைப்பில் ஒருமாதகாலம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இங்கு பல்லின மக்களும் ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
அங்கு அறியப்படாத, பேசப்படாத பல வலிகளை, வேதனைகளை, கொடுமைகளின் சாட்சிகளை ஒவியம் பேசியதாகவும் பல விடயங்களை அறிந்ததாகவும் பலரும் இதன் தூரிகை ஆசிரியரான வளர்ந்துவரும் ஓவியர் சாயம் பிரவாகினியை பாராட்டி ஊக்கப்படுத்தினர். இங்கு குறிப்பிட்டாகவேண்டிய தனிச்சிறப்பு என்னவெனில் குரு அற்ற சிஸ்யனாக தானே குருவுமாகி தானே சிஸ்யனுமாகி தன்னந்தனியாக தன்னுள் எழுந்த ஓவிய முயற்சியை ஈழத்தமிழினத்திற்கு காவியப் படையலாக்கி படைத்துவரும் இவ் ஓவிய இளவல் கருத்திடுகையில்… “வன்முறையை பேசிக்கொண்டிருப்பதால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை இந்த வலியை வலிமையாக்கி உளவலுவோடு தொடர்ந்தும் வன்முறை நிகழாதிருக்க வழியமைப்பதே சிறந்தது” என பதிவுசெய்யும் இவர் “எனது ஓவியங்களை எனது கைகளைக் கொண்டே வரைய வேண்டும், கைவிரல்கள் வண்ணத்தில் தோயவேண்டும், என்மூச்சுக் காற்று ஒவ்வொரு ஓவியத்திலும் பட வேண்டும்”
எனக் கூறும் சாயம் பிரவாகினி நூற்றுக்கணக்கான ஓவியங்களை பிரபாகித்திருப்பதோடு மேலும் தன்னுடைய குழந்தைப் பருவம் ஈழத்து மண்ணுக்குரியதால் பெருமை அடைவதாகவும் ஈழத்து தமிழ்ப் பெண்ணாக தைரியமாக நிற்க அதுவே அடித்தளமாகியதாகவும் வாழ்வதற்கு கற்றுத்தந்த மண்ணின் பெருமையை எங்கு சென்றாலும் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்றும் வன்முறைகள் முற்றாக இல்லாதிருக்க வேண்டுமெனவும் அதற்கான தனது பணியே ஓவியப்பயணம் என்கிறார் இவர்.
இவ்வாறாக தனது ஓவியப் பயணத்தினூடாக சாயம் பிரவாகினி அவர்கள் நாடு கடந்து பல்வேறுபட்ட நினைவுகளை, புராண வரலாற்று ஓவியங்களை வெளிப்படுத்துகை செய்து வருகிறார் இவரை வரைகலை ஓவியத்துறை சார்ந்தவர்களும் பல்துறை பேராளர்களும் ஊக்கப்படுத்தி பல்லாயிரம் ஓவியங்கள் படைக்க கரம் கொடுத்து உதவத் திடம் கொள்வேண்டுமென நாமும் வேண்டி நிற்கும் தருணத்தில் இவரது ஓவிய ஆற்றல் பேராற்றலாக நாமும் வாழ்த்தி நிறைகிறோம்.
து.திலக்(கிரி),