தமிழர் தம் கலைகளுள் தற்காப்புக்கலை, ஓகக்கலை, சிலம்பக்கலை இரண்டறக் கலந்திருப்பது போற்றுதற்கும் பாராட்டுக்குரியதுமாகும். உலக வேக ஓட்டத்தில் நவீன பொழுதுபோக்கு சாதனங்களின் மிகைப்படுத்தப்பட்ட வருகை சிறியவர் முதல் பெரியவர் வரை கடிகார முள்ளைப்போல் ஓய்வின்றிச் சுழர வைத்துள்ளது. அந்தவகையில் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் திரு.விபுலானந்தன் கௌரிதாசன் அவர்களின் தற்காப்பு, ஓகக்கலை, சிலம்பம் ஆகிய கலைகள் பற்றிய பார்வையோடு இன்றைய ஆளுமைகள் பகுதி இடம்பெறுகிறது
ஈழத் திருநாட்டின் திருகோணமலையில் திரு. திருமதி. விபுலானந்தன் சுகந்திமாலா மண இணையருக்கு 15.09.1974இல் கௌரிதாசன் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை இ.கி.ஶ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார். தவிர மனித உரிமைகள், மாற்ற முகாமைத்துவம், புலம்பெயர்ந்தவர்களை நிபுணத்துவமாக கையாளுதல் போன்ற பல்வேறு உயர் கல்வி நெறிகளை இலங்கையிலும், சுவிற்சர்லாந்திலும் நிறைவு செய்துள்ளார். கடந்த வருடம் தனது 50வது வயதில் முனைவர் பட்டப் படிப்பினை கம்போடியாவின் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார்.
இவரது தொழில் நிலைகளாக பல்வேறு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இலங்கையில் பணியாற்றி, தற்போது சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்த அகதிகளுக்கான நிறுவனமொன்றில் பதில் குழு தலைவராக பராமரிப்பு மற்றும் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது பன்னிரெண்டாவது வயதில் திருகோணமலையில் புகழ்பெற்ற தற்காப்புக் கலை ஆசான் பா.ரஞ்சன் அவர்களிடம் முதல்முதலாக தற்காப்பு பயிற்சிகளை ஆரம்பித்தார். தொடர்ந்து இலங்கையின் மூத்த கராத்தே ஆசிரியரான திரு அசனார் அவர்களிடம் கறுப்பு பட்டியை பெற்று, பின்னர் இலங்கையின் பிரபல கராத்தே ஆசிரியரும், உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவருமாகிய திரு அலெக்சாண்டர் அவர்களிடம் தனது சர்வதேச கறுப்பு பட்டி தரத்தினையும் பெற்றுக் கொண்டார்.
இவரது குடும்பத்தில் இவர் உட்பட ஆறு பேர் கறுப்புப் பட்டி பெற்ற தற்காப்புக் கலை வீரர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டரங்கின் திறந்த மண்டபத்தில் இவர் தனது பிரதான நேரடிக் தற்காப்பு பயிற்சி வழங்கும் பள்ளியினை நிறுவிக் கொண்டார். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒழுக்கநெறிக் கோவையாக மது, புகைத்தல், தெருச்சண்டை, சமூக முறைகேடுகள் போன்றவை முற்றாகத் தடைசெய்யப்பட்டு இதனை மீறும் மாணவர்கள் உடனடியாகப் பயிற்சி நெறிமுறைகளில் இருந்து நீக்கப்பட்டு உறுப்புரிமையும் இல்லாமல் ஆக்கப்படும்.
இப்பள்ளியின் நோக்கம் நல்லொழுக்கத்தையும் சமூக விழுமியங்களையும் தமிழ் மொழியையும் முதன்மையாகக் கொண்டு உருவாக்கம் பெற்று செயற்படுவதாகும். ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களை பயிற்றுவித்து 30இற்கு மேற்பட்ட கறுப்புப்பட்டி வீர்ர்களை உருவாக்கி அவர்கள் மூலம் திருகோணமலையில் பத்துக்குக் மேற்பட்ட பயிற்சிக்கூடங்களை அமைத்து பலநூற்றுக்கணக்கான மாணவர்களை தற்காப்புக்கலை வீரர்களாக உருவாக்கியுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியிலான தற்காப்பு சுற்றுப் போட்டிகளில் இவரது மாணவர்கள் திறம்படப் பங்குகொண்டு ஏராளமான பதக்கங்களை தமதாக்கிக் கொண்டனர். தற்போது சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் கௌரிதாசன் அவர்கள் கால ஓட்டத்தின் கனதிக்குள் சுழற்சிமுறையான வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இளைய தலைமுறையினருக்கு கராத்தேக்கலை, யோகாக்கலை, சிலம்பக்கலை என 200 மாணவர்களை உள்வாங்கி பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
இவரது பள்ளியில் தமிழ் மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெற முடியும் என்பதோடு தமிழ்மொழியில் உரையாட வேண்டுமென்பதும் தாயகத்தில் இவரது ஆரம்பப் பள்ளியில் இருந்த கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளது.அதனை மீறுவோர் பள்ளியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். இப்பள்ளியின் சிறப்பம்சமாக 12 இளையோர்கள் சுவிஸ் கராத்தே சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களாகவும் நடுவர்களாகவும், 13 தமிழ் இளையோர்கள் பயிற்றுனர்களாகவும் சேவையாற்றுகிறார்கள்.
அனைத்துலக சான்றிதழ் மற்றும் சுவிஸ் தேசிய கறுப்புப்பட்டி சான்றிதழ் பெற்ற 40 வீர வீராங்கனைகள் பயிற்சிகளைப் பெறுவதோடு ஏனைய மாணவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்குகிறார்கள். தற்போது இவர் ஜப்பான் நாட்டின் 6வது கறுப்புப்பட்டி தரத்தினையும், சுவிஸ் தேசிய கறுப்புப்பட்டி 5ம் தரத்தினையும் பெற்றுள்ளார். சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட “ஏ” தர நடுவராகவும் கடமையாற்றுகிறார். 2017இல் சீனாவில் உலக இதோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டியில் 6 வீர, வீராங்கனைகள் பங்குபற்றி 4 பதக்கங்களும், 2023ல் டென்மார்க்கில் உலக இதோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டியில் 40 வீர, வீராங்கனைகள் பங்குபற்றி 38 பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
நடப்பு ஆண்டான 2025ல் கடந்த மாதம் ஆஸ்திரியா நாட்டில் இடம் பெற்ற அனைத்து உலக கராத்தே சுற்றி போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளனர். இந்த ஆண்டு ஜெர்மனி, சுவிஸ் மற்றும் ஜப்பான் தேசத்தில் இடம்பெறவுள்ள அனைத்துலகப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 40 வீர, வீராங்கனைகள் தொடர் பயிற்சியில் உள்ளனர்.
ஓகக்கலையினை குரு சீடன் முறையில் முறையாக தனது குருவான யோசன கலாநிதி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி அவர்களிடம் பயின்று அரங்கேற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ஓகக்கலையில் அகில இலங்கை சர்வமத யோகாசன சபையினால் யோகாசன கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். தமிழரின் அற்புதக் கலையான யோகாசனக் கலையில் (ஓகக்கலை) உள்ள ஆசனங்களுக்கான (இருக்கை / உருநிலை) வடமொழிச் சொற்களை தவிர்த்து அவற்றை தூய தமிழ் மொழியில் மீண்டும் மொழிமாற்றம் செய்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருவதோடு சுவிஸ் நாட்டவர்களின் நிகழ்வுகளில் ஓகக்கலை கண்காட்சிகளை நடத்தி அதன் வரலாறை பிற நாட்டவருக்கும் கடத்தி வரும் கௌரிதாசன் அவர்கள் அதற்காக « ஓகம் கலைப்பள்ளி என்ற அமைப்பினையும் நிறுவியுள்ளார்.
அருகிவரும் தொன்மைக் கலையான சிலம்பக் கலையினை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கோடு சுவிஸ் சிலம்ப சம்மேளனத்தினை ஆரம்பித்து இளையோர்களுக்கும், பெரியோர்களுக்கும் பயிற்றுவித்து வருகிறார். 2023ல் இந்தியாவில் உலக சிலம்பப் போட்டிகளில் சுவிஸ் நாட்டிலிருந்து இவரது மாணவர் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் என மூன்று பதக்கங்களைபெற்று வந்தமை ஏனைய இளையோர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் பெற்று இக்கலையை பயில தூண்டியது.
தமிழ் மொழி சார்ந்த அரங்க நிகழ்வுகளில் மட்டுமன்றி விசேடமாக வெளிநாட்டவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வுகளிலும் சிலம்பாட்டத்தையும் அக்கலைகே உரித்தான பாரம்பரிய உடையுடன் மேடையேறி வருகின்றனர் அதன் தொன்மையையும் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இவர் சிலம்பக்கலையில் இந்தியாவில் இயங்கும் உலக விளையாட்டுக் கல்லூரியில் ஆசிரிய டிப்ளோமாவை நிறைவு செய்திருப்பதுடன், அனைத்துலக சிலம்பக்கலை “ஏ” தர நடுவராகவும் விளங்குகிறார்.

உயர்கல்வி திட்டம் ஒன்றிற்காக சிலம்பப்பயிற்சியினை ஜெர்மன் மொழியில் காணொளியாக்கி வெளியிடப்பட்டுள்ளார்கள். அண்மையில் மலேசியாவிலிருந்து உயர்நிலை சிலம்ப ஆசான்கள் சுவிஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டு சிலம்பப் பயிற்சிப்பட்டறை நிகழ்த்தப்பட்டது.
தாயகத்திலும் இலங்கை சிலம்ப சம்மேளனம் மற்றும் ஓகம் கலைப்பள்ளி ஊடாக சுற்றுப்போட்டிகள், பயிற்சி பட்டறைகள் என்பன இவரது பங்களிப்புடன் செய்யப்படுகிறது.
மலேசியாவில் இடம்பெற்ற சிலம்பப் போட்டிகளுக்கு விசேட விருந்தினராக அழைக்கப்பட்டு அனைத்துலக சிலம்பம் சம்மேளனத்தின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளராகவும், இந்தியாவில் இயங்கும் உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் உப தலைவராகவும் நியமிக்கப்படுள்ளார். 2025ல் மலேசியாவில் நடைபெறவுள்ள அனைத்துலக சிலம்ப சுற்றுப் போட்டிகளுக்காக இவரது மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
சிலம்பக்கலையினை மிக விரைவில் சுவிஸ் விளையாட்டு அமைச்சின் அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மிளிர வைப்பதே தனது பேரவா என குறிப்பிடுகிறார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் மிகத் தொன்மையான பாரம் தூக்கிச் செய்யும் உடற்பயிற்சிக் கலையான “கரலா வீச்சினை” திரு.பொ .ரவீந்திரன் அவர்களிடம் முறையாகக் கற்று அதனை மீட்டெடுக்கும் நோக்குடன் கடின முயற்சியுடன் செயலாற்றி வருகிறார். சுவிஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயிற்சிகளை வழங்கி மேடை நிகழ்வுகளிலும் அதனை அரங்கேற்றி வருகிறார்.
இவர் திருகோணமலை மாவட்ட முன்னாள் மாவட்ட சாரணர் தலைவரும், தரிசின்னம் பெற்ற சாரணர் தலைவருமாவார். சுவிஸ் அரசின் சாரணிய சங்கத்துடன் இணைந்து சுவிஸ் வாழ் தமிழ் இளையோர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கான ஆளுமை, சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் முகமாக ஒரு சாரணிய குழுவினை ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் இடம்பெறும் பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் தனது மாணவர்களுடன் கலந்துகொண்டு வருகிறார்.
இவர் வகிக்கும் பொறுப்புகள்:
* நிறுவனர் – உலக ஐக்கிய தற்காப்புக்கலை சம்மேளனம்.
* நிறுவனர் – சுவிஸ் தமிழர் கராத்தே ஒன்றியம்.
* தலைமைப்பயிற்சி ஆசிரியர் – சுவிற்சர்லாந்து – ஜப்பான் கராத்தே தோசுக்காய்
* தலைவர் – அனைத்துலக ஐக்கிய யோகாசன சம்மேளனம் (IUYF) – இந்தியா
* சிரேஸ்ட ஆலோசகர் – ஓகம் யோகாசன கலைப்பள்ளி – இலங்கை
* நிறுவனர் – ஓகம் கலைப்பள்ளி – சுவிஸ்.
* நிறுவனர் – சுவிஸ் சிலம்ப சம்மேளனம்.
* உபதலைவர், உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனம் (WUSF) – இந்தியா
* பணிப்பாளர் – ஐரோப்பா – அனைத்துலக சிலம்ப சம்மேளனம் (ISF) மலேசியா
* சிரேஸ்ட ஆலோசகர் , இலங்கை சிலம்ப சம்மேளனம்
* சிரேஸ்ட ஆலோசகர் , இலங்கை பாரம்பரிய அடிமுறை சங்கம்.
* கின்னஸ் உலகசாதனை (குழு) – 2021
* ஆட்சிக்குழு உறுப்பினர் (ஊரகக் கலைகள்) – சுவிற்சர்லாந்து தமிழ் சங்கம்.
* பல்துறைக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர்.
இவர் பெற்ற விருதுகள்
1. கல்வி தேர்ச்சி விருது 2017 – எழுகை,சுவிட்சர்லாந்து.
2. சாமகானம் விருது 2018 – பிரித்தானியா
3. சிறந்த பயிற்றுவிப்பாளர் 2019 – இளம் ரோயல் உதைப்பந்தாட்ட கழகம், சுவிஸ்
4. அனைத்து உலக யோகக்கலை யோகி விருது 2021 – உலக விளையாட்டு கல்லூரி, இந்தியா
5. அனைத்து உலக வீர கலை சிலம்பம் விருது 2022 – உலக சாதனை பதிவேடு, இந்தியா.
6. கராத்தே அர்ப்பணிப்பு விருது 2022 – ஷிட்டோ ரியூ கராத்தே கழகம், பிரான்ஸ்
7. 2022 ல்-ன் புகழ் விருது – ஆங்கில மொழிக்கல்வி வாகை மையம், பிரான்ஸ்
8. சிறந்த தலைமை பயிற்றுவிப்பாளர் 2023 – புதிய வார்ப்புகள் இசைக்குழு, சுவிஸ்.
9. சிறந்த கராத்தே ஆசான் 2023 – தமிழர் இல்லம், சப்கவுசன், சுவிஸ்.
10. மாண்புமிகு சிறந்த ஆசான் விருது 2023 – உலக ஐக்கிய தற்காப்பு கலை சம்மேளனம், பிரித்தானியா.
11. சிறந்த கராத்தே கலை ஒருங்கிணைப்பாளர் விருது 2023 – ஐரோப்பா தமிழர் மதிப்பளிப்பு கழகம், சுவிஸ்
12. சிறந்த ஆசான் விருது 2024 – அனைத்துலக தமிழ் ஊடகம், சுவிட்சர்லாந்து
13. விளையாட்டில் சிறந்த தேர்ச்சி மற்றும் தாக்கம் – ஐக்கிய இராச்சியம் தமிழர் விருது 2024.
14. நல்லாசான் விருது 2025 – அரும்பு தமிழ் மையம், நெதர்லாந்து
15. சிறந்த வழிகாட்டி, பயிற்றுவிப்பாளர், முன்மாதிரி விருது 2025 – ஜப்பான் கராத்தே இதோசுக்காய், இலங்கை.
இவ்வாறான விருதுகளையும் மதிப்பளிப்புகளையும் பெற்று பாரம்பரிய கலை நுணுக்கங்களையும் தொன்மைக் கலைகளையும் தாயகத்திலும், தாயகம் கடந்து சுவிற்சர்லாந்திலும் தளம் அமைத்து இளைய தலைமுறையை உள்வாங்கி கலையை பரப்பி வரும் விபுலானந்தன் கௌரிதாசன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பையூர்/சுவிற்சர்லாந்து.