தமிழ் உணர்வையும் பாரம்பரிய கலைப் பொக்கிசத்தையும் கடத்தும் “ராதா நடனாலயம்”
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்பன அதீத பயபக்தியோடு வாழ்வியல் முறைக்குள் இரண்டறக் கலந்து நிற்பவையாகும். இங்கு கலையும் இலக்கியத் துறையும் மரபுவழிக் கடத்தலாக ஒன்றித்து நிற்பதை அதிகம் காணமுடிகிறது. அதன் தொடர்ச்சியாக தாய் மண்ணைவிட்டு பல தசாப்தங்களாக உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழினம் எதிர்கால சந்ததிக்கு கலை நுட்பங்களையும் அதன் நுணுக்கங்களையும் திறமைகளையும் “யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்” என்ற திருமந்திர வாக்கிற்கமைய கடத்தி வருகிறார்கள் என்பது மகிழ்ந்து பாராட்டத்தக்க ஒன்றாகும்.
அந்த வகையில் தாய் மண்ணிற்காய் தன்னை விதையாக்கிய மானமாவீரர் ராதா எனும் உன்னத வீரனின் நாமம் சுமந்து சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் 1991ஆம் ஆண்டு ஆரம்பித்து நடாத்தப்பட்டு வரும் “ராதா நடனாலயம்” அதிபர் முதுகலைமாணி, கலாநிதி ஞானசுந்தரி வாசன் அவர்களின் நுண்கலைப் பயணத்தோடு இவ்வாரம் இணைவோம்.
தாயகத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகொளிரும் சங்கானை எனும் ஊரில் திரு.திருமதி.சிவஞானம் நாகரத்தினம் தம்பதிகளின் நான்காவது மகளாக ஞானசுந்தரி அவர்கள் பிறந்தார். இவரது தாயார் சிறந்த இசைஞானம் மிக்கவராக இருந்ததோடு வயலின் இசைக்கருவியை மீட்டுவதிலும் கைதேர்ந்தவராக அன்றைய காலத்தில் திகழ்ந்தார்.

முதல் முதலில் சிறு பராயத்தில் ஞானசுந்தரி அவர்கள் தனது தாயாரிடம் இசைப் பயிற்சியை ஆரம்பிக்கலானார். இளமைக் காலத்திலேயே தங்கள் பிள்ளைக்கு இருக்கக்கூடிய கலை ஆர்வத்தைக் கண்ணுற்ற பெற்றோர்கள் இவரது ஆறாவது வயதில் திருமதி.கிருஷாந்தி இரவீந்திரா அவர்களிடம் பரதநாட்டியத்தை முறைப்படி பயில ஏற்பாடு செய்திருந்தனர். அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட குழந்தையாய் ஞானசுந்தரி அவர்கள் தடம் பதித்தார். நடனத்தை முறைப்படி பயின்றதோடு மட்டுமன்றி அவ்வப்போது ஆண்டுகள் தோறும் நடைபெறும் நிழ்வுகளில் தனது கலைமீதான தனித்துவத்தையும் நடன ஆளுமையையும் நிலை நிறுத்தி சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார்.
ஞானசுந்தரி அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்/சங்கானை சிவப்பிரகாசா மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கலவியை யாழ்/பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும், உயர்தரத்தை யாழ்/திருக்குடும்ப கன்னியர் மடம் ஆங்கிலப் பாடசாலையிலும் கற்று பட்டப்படிப்பினை யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் நிறைவு செய்தார். ஆரம்பக் கல்வியை கற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாடசாலையில் முதல் நிலை மாணவியாக திகழ்ந்த இவருக்கு கல்வியும், கலையும், பெற்றோரின் மகிழ்வுமென காலங்கள் கரைந்தோட மகிழ்விற்கும் கலகலப்பிற்கும் கலைப் பயணத்திற்கும் கடிவாளம் இட்டதுபோல இவரது பத்தாவது வயதில் பக்கத்துணையாய் கலைக்கான ஆதாரமாய் இருந்த பெற்றதாயை இழந்துவிடுகிறார்.

தாயின் இழப்பின் துயரம் மீளாத சோகத்தில் ஆழ்த்த கலைப் பயிற்சிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டது. நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாகி பெற்றதாயே தெய்வமாக நின்று மனதில் திடம் கொடுக்க மீண்டும் நடன வகுப்புக்களை திருமதி.ராஜினி மோகன்ராஜ் அவர்களிடமும், வாய்ப்பாட்டை திருமதி.விஜயலட்சுமி ஶ்ரீநிவாசகம் அவர்களிடமும், வயலின் வாத்தியத்தினை திருமதி.மலர்தேவி சிவசேகரம் அவர்களிடமும் முறைப்படி பயின்று வட இலங்கை சங்கீதசபைப் பரீட்சையில் தோற்றி சித்தி எய்தினார்.
தனது தாயாரின் ஆத்மாத்த ஆசிகளோடு கலை பயிற்சி வகுப்புகளை தொடர்ந்த இவர் யாழ்/பண்டைத்தருப்பு மகளிர் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் திருமதி.பத்மனி ஆனந்த் அவர்களின் நெறிப்படுத்தலில் தனி நடனம், குழு நடனம் என்பவற்றில் பங்குகொண்டு தொடர்தும் தனது ஆளுமைத்திறனை வெளிப்படுத்தியதுடன் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளில் பாற்கடல், தாருகாவனம், சூரசம்காரம் போன்ற நாட்டிய நாடகங்களில் பிரதான வேடமேற்று நடனமாடி பரிசில்களை வென்று தன் கலைப்பயணத்திற்கான உறுதியான அத்திவாரத்தை இட்டுக்கொண்டார்.
உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்து யாழ்/திருக்குடும்ப கன்னியர்மடம் ஆங்கிலப்பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் இவரது கலைத்திறமையை அறிந்திருந்த ஆசிரியை திருமதி.வினோதினி சண்முகநாதன் அவர்கள் தனது நெறிப்படுத்தலில் குழுநடனம், நாட்டிய நாடகம் என போட்டி நிகழ்வுகளில் பங்குகொள்ளும் வாய்ப்பினை இவருக்கு வழங்கியிருந்தார். அங்கும் தனது தனித்துவத்தையும் ஆளுமையையும் நிலைநாட்டி பாராட்டுகளைப் பெற்று மகிழ்ந்தார்.
ஞானசுந்தரி அவர்களை கலையெனும் தெய்வீகம் பற்றிப் படரத் தொடங்கியது.
இவருக்குள் இருந்த கலை ஆற்றல் நாடி நரம்புகளைப் புடம்போட உயர்தரத்தில் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்றிருந்தாலும் யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் அந்தக் காலப்பகுதியில் இருந்த விதிமுறைகளுக்கமய நடன பாடத்திற்குரிய உள்நுழைவு, அறிமுறை, செயன்முறைத் தேர்வுகளில் 170 மாணவர்கள் தோற்ற 13 மாணவரகளே தெரிவு செய்யப்பட்டனர். அதற்குள் ஞானசுந்தரி அவர்களும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். அங்கு இவர் பரதநாட்டியத்தை முதன்மைப் பாடமாகவும் வயலின் வாத்தியத்தை துணைப் பாடமாகவும் தெரிவு செய்தார்.
கற்ற காலத்தில் அறிமுறை, செய்முறைப் பயிற்சிகளை திருமதி.லீலாம்பிகை செல்வராசா, செல்வி.சாந்தா பொன்னுத்துரை, திருமதி.அனுசா மயில்வாகனம், திருமதி.கிருஷாந்தி இரவீந்திரா, திருமதி.பத்மரஞ்சனி உமாசங்கர் ஆகியோரிடம் பயின்றதுடன் துணைப்பாடமான வயலினை திருமதி.பத்மசிகாமணி, செல்வி.பாக்கியா நடராசா ஆகியோரிடமும் பயின்றார். இங்கு பயின்ற காலத்தில் குழுநடனம் (கீர்தனம்) “சக்தி பிறக்கிறது”, நாட்டிய நாடகம் ஆகியவற்றில் பங்குகொண்டதுடன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் 25ஆவது ஆண்டு விழாவிலும் பங்குகொண்டு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார்.
1990ஆம் ஆண்டு தனது நான்கு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்து “நாட்டியக் கலைமணி”பட்டத்தினைப் பெற்றார். இவ்வாறாக இவரது கலைப் பயணம் தொடர தாயகத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1990ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு புதிய கலாச்சாரம், பல்லின மக்கள், புலமையற்ற மொழி, புதிய நண்பர்கள் என இருந்த நிலையிலும் தான் கற்ற கல்வியையும், கலைத்தாய் கொடுத்த கொடையையும் தான் வருகைதந்த அதே ஆண்டில் இருந்து நிகழ்வுகளில் வெளிப்படுத்தத் தவறவில்லை.

தன்னிறைவான ஆளுமையுடனும் விடா முயற்சியுடனும் பயணித்த ஞானசுந்தரி 1991ஆம் ஆண்டு “ராதா நடனாலயம்” எனும் நடனப் பள்ளியை நிறுவி அன்று முதல் பல மாணவர்களைக்கு நாட்டியக் கலையை கடத்தி வருகிறார். நடனப் பள்ளி ஆரம்பிக்கும் காலத்திலிருந்த அதே பற்றுறுதியும் எதிர்கால சந்ததி எங்கு சென்றாலும் எமது கலையை அழியவிடக்கூடாதென்ற அதே ஓர்மமும் இன்று வரை இவருடன் கூட இருப்பதென்பது தனித்துவமான சிறப்புப் பெற்று நிற்கிறது.
ஆரம்பத்தில் தாயகத்தில் வறுமையில் வாடும் எம் மக்களுக்கு உதவும் நோக்கோடு உதவித்திட்டத்திற்கான நடன நிகழ்வுகளில் தனது மாணவர்களை தயார் செய்து சுவிற்சர்லாந்தின் பல மாநிலங்களிலும் நடன நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். இவரது சேவையை பாராட்டி சுவிஸ் கிருஷ்ண பக்திக் கழகத்தினர் “கலாசூரி” எனும் விருது வழங்கி மதிப்பளித்தனர். 2000ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தலைமையில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டதுடன் “பூபாளம்” எனும் நிகழ்ச்சியில் ஏனைய ஆசிரியர்களுடன் இணைந்து ஆற்றுகை செய்து பாராட்டையும் பெற்றுள்ளார்.
ராதா நடனப்பள்ளி ஊடாக பல மாணவர்களை நடன தாரகைகளாக உருவாக்கம் செய்துவரும் இவர் கடந்த பதின்மூன்று வருட காலமாக அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தின் செயலாளராக கடமையாற்றி வருவதோடு ஜேர்மன், இத்தாலி, பிரித்தானியா, நோர்வே, டென்மார், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் பரீட்சைகளிலும் போட்டி நிகழ்வுகளிலும் நடுவராக கடமையாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு திருமதி ஞானசுந்தரி வாசன் அவர்களின் 25 வருட கலைச்சேவையை பாராட்டி “கலைச்சுடர்” எனும் விருதினை அனைத்துலக தமிழ்க்கலை நிறுவம் வழங்கி கௌரவித்துள்ளது.
இவர் இந்தியா சென்று திருச்சி கலைக்காவேரி ஊடாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 2015அம் ஆண்டு “நுண்கலைமானி” பட்டத்தினையும் 2018ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முதல்த்தர மாணவியாக தனது கற்கைநெறியைப் பூர்த்தி செய்து “முதுகலைமாணி” பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். இளைய தலைமைறையினர் மத்தியில் தமிழ் உணர்வையும் பாரம்பரிய கலைப் பொக்கிசத்தையும் கடத்தும் அளப்பரிய பணியில் சுவிஸ் நாட்டில் பத்து மாணவிகளுக்கு அரங்கேற்றம் செய்து வைத்துள்ள இவர் தனது மாணவி ஒருவரின் அரங்கேற்ற நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக வருகைதந்த இவரது குருவான திருமதி.ராஜினி மோகன்ராஜ் அவர்கள் இவரின் கலைச் சேவையைப் பாராட்டி “நிருத்திய சுடர்” எனும் விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இது இவருக்கு மட்டற்ற மகிழ்வையும் பேரானந்தத்தையும் கொடுத்து நின்றது எனலாம். சுவிற்சர்லாந்தில் வருடாவருடம் நடைபெறுகின்ற “நாட்டியமயில்” எனும் நடனப் போட்டி நிகழ்வில் தனி நடனம், குழுநனடம், நாட்டிய மயில்களின் பிரிவு, எழுச்சி நடனப் பிரிவு போன்ற நிகழ்வுகளில் இவரது மாணவர்கள் பல தடவை பரிசில்கள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 2002, 2003, 2017ஆம் ஆண்டுகளுக்கான நாட்டியமயில் விருதுகளை இவரது மாணவிகளே பெற்றுக்கொண்டனர்.
2013ஆம் ஆண்டு நாட்டிய மயில் போட்டி நிகழ்வில் இலங்கையின் தலைசிறந்த நாட்டிய ஆசான்களான செல்வி.சாந்தா பொன்னுத்துரை, திருமதி.பத்மரஞ்சனி உமாசங்கர் நடுவர்களாகக் கடமையாற்றிய நாட்டிய நாடகப் போட்டியில் முதலாவது பரிசினை இவரது நடனாலய மாணவிகளும் நெறியாள்கை செய்த ஆசிரியர்களுக்கான “தேசச்சுவடு” என்ற விருதினை இவரும் பெற்றுகொண்டார். அதேபோன்று 2023ஆம் ஆண்டும் சிறந்த ஆசிரியருக்கான “தேசச்சுவடு” விருதினையும் இவரே பெற்றுக்கொண்டார்.
சுவிற்சர்லாந்தில் இவரது தொடர் கலைச் சேவையைப் பாராட்டி Heise International University 2020ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூரில் வைத்து “கலாநிதி” பட்டம் வழங்கி கௌரவித்தது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சங்கமம் குளோபல் அக்கடமி & அசோசியேஷஸ் நிறுவகம் 01.05.2025 அன்று பிரான்ஸ் நாட்டில் வைத்து “பெருவுடை நாட்டிய ஆசான்” விருதுப் பட்டையம் வழங்கி மதிப்பளித்தது. கலை என்பது போட்டி, விதிமுறைகளுக்கப்பாற்பட்ட மனவுணர்வின் வெளிப்பாடாகும். இது கலைஞானம் மிக்கவர்களுக்கு மட்டுமே உரித்தானது.
கலையை பெறுவதோடு மட்டுமல்லாது அதனை பிறருக்கு நேர்த்தியாக கற்றுக் கொடுப்பதிலும் ஒரு தனித்துவமும் கலைஞானமும் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில் வெளிநாட்டு வாழ்வியல் முறையில் இயந்திரமயமான பூகோள சூழற்சியில் குடும்பத் தலைவியாய் இருந்து கொண்டு சுவிற்சர்லாந்தில் கடந்த 14ஆண்டுகளாக மருத்துவ உபகரண உற்பத்திச்சாலையின் முழுநேர (100%) பணிச்சுமை, சமூக விடயப் பரப்புகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு தனது வாழ்க்கைத்துணைவர், பிள்ளைகளின் பேராதரவுடன் மூன்று தசாப்தங்கள் கடந்த நிலையில் ராதா நடனாலயத்தின் அதிபராய் இருந்து நடனக் கலையை பயிற்றுவித்துவரும் கலாநிதி ஞானசுந்தரி வாசன் அவர்களின் ஆளுமையை பாராட்டி பெருமை சேர்க்கும் இத்தருணத்தில் 2024ஆம் ஆண்டு
“ராதா நடனாலயம்” தனது 33ஆவது ஆண்டு விழாவை உணர்வெழுச்சியுடன் “நர்த்தன மாலை” எனும் பெயர்ரில் நடாத்தி பெருமை கொண்டது.
நடனாலய அதிபரின் நெறியாள்கையில் பல மேடைகளில் நிகழ்த்தப்பட்ட அவரது மாணவர்களின் நடன ஆற்றுகை பார்ப்பவர்களை கவர்ந்தீர்க்கும் தனித்துவம் கொண்டதாகவும் இவரது மாணவிகள் அரங்கை விறுவிறுப்போடு எவ்வித தொய்வுகளுமின்றி தங்களுக்கு கிடைத்த அந்த மணித்துளிகளுள் பார்வையாளர்களை மெய்மறந்து இரசிக்கச் செய்யும் ஒரு தனித்துவ ஆளுமை கொண்டிருப்பதை பல அரங்குகள் நிரூபித்து நிற்கிறது. இதன் தனித்துவப் பெருமைக்குரியவர் ராதா நடனாலயத்தின் அதிபர் முதுகலைமாணி கலாநிதி ஞானசுந்தரி வாசன் அவர்களே.
து.திலக்(கிரி), SWISTZERLAND