ஜெனீவாவிலிருந்த மனிதாபிமான அமைப்பு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது – சுவிஸ் அரசு அதிரடி
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஆதரித்ததாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமான அமைப்பான Global Humanitarian Foundation (GHF), தனது செயல்பாடுகள் தொடர்பான தீவிர விமர்சனங்களுக்கும், வழக்குகளுக்கும் மத்தியிலே சுவிஸ் அரசின் உத்தரவின்பேரில் தற்போது மூடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் GHF தனது ஜெனீவா அலுவலகத்தை திறந்தது. அதன் நோக்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழியே செல்லாமல், நேரடியாக காசா பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது என்பதாக இருந்தது. ஆனால், இந்த முயற்சிகள் சில வாரங்களிலேயே உலகளாவிய சர்ச்சையை ஏற்படுத்தியதாக UN விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவுபொருட்கள் விநியோகத்தின் போது நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தன. இதனையடுத்து, GHF அமைப்பின் சுவிஸ் இயக்குநர் பதவி விலகினார். மேலும், மனித உரிமை அமைப்பான TRIAL International, GHF அமைப்பின் செயற்பாடுகளை ஆராயும் வகையில் சுவிஸ் அதிகாரிகளிடம் இரண்டு முறை முறைப்பாடுகளை முன்வைத்தது.

இந்நிலையில், RTS (Radio Télévision Suisse) வெளியிட்ட செய்தியின்படி, சுவிஸ் தேசிய அறக்கட்டளை மேற்பார்வை ஆணையமான ASF, GHF அமைப்பை அதிகாரபூர்வமாக மூட உத்தரவிட்டது. சுகாதார அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இது பற்றி அதிகாரிகள் தெரிவிக்கையில், GHF அமைப்பு, தற்போது சுவிஸில் எந்த உத்தியோகபூர்வ முகவரியோ பிரதிநிதியோ இல்லாமல், தங்களது சட்டப்பூர்வ உரிமைகளையும் நடவடிக்கைகளையும் கைவிட்ட நிலையில் இருப்பதால், அது இனி சுவிஸில் இயங்குவதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கருதப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
மனிதாபிமான உதவிக்கான நடவடிக்கைகள் நேர்மையாகவும், உயிரிழப்புகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான முக்கியமான செய்தியையும் இந்த நிகழ்வுகள் உலகத்திற்கு எடுத்துரைக்கின்றன.
இதை அடுத்து, GHF அமைப்பின் முன்னைய நடவடிக்கைகள், மற்றும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியளிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்தும் எழுந்துவரும் வாய்ப்பு உள்ளது.
@swissinfo