சூரிச் – ஹோர்கனில் பயங்கர ரயில் விபத்து : ஒருவர் காயம், ஒருவர் கைது
சூரிச் மாநிலத்தின் ஹோர்கன் (Horgen ZH) பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 6:40 மணியளவில், ஒரு டெலிவரி வாகனம் (lieferwagen) மற்றும் இன்டர் ரீஜியோ (Interregio) ரயில் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இது ரயில்பாதையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
❗எப்படி விபத்து நடந்தது?
21 வயதுடைய டெலிவரி வாகன ஓட்டுநர், ரயில்வே சிக்னலில் சிவப்பு ஒளி எச்சரிக்கையை மீறி ரயில்பாதை மீது சென்றுள்ளார். ரயில்வே தடுப்புகள் (Schranken) இறங்கியபோது வாகனம் அவற்றுக்குள் சிக்கி விடுகிறது. வாகனத்தை வெளியேற்றும் முயற்சி வெற்றியடையாததால், சூரிசிலிருந்து வரும் ரயில் வாகனத்தை மிக வேகத்தில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது வாகனம், ரயிலும் அருகில் உள்ள தோட்ட சுவற்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கியுள்ளது.

👨⚕️ பலர் மருத்துவ உதவியுடன் மீட்பு
வாகன ஓட்டுநரை ஹோர்கன் தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமத்துடன் மீட்டு, அருகிலுள்ள Horgen மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். ரயிலில் பயணம் செய்த 470க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஒரு பெண் பயணிக்கு மனஅழுத்தத்தால் நிலைமையிழப்பு ஏற்பட்டது என்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் ஒரு பயணி, ரயிலில் இருந்தபோது அவரது பணப்பை (Portemonnaie) திருடப்பட்டது என்று புகார் செய்தார். விரைவான விசாரணையின் பின், 19 வயதுடைய ஒரு அல்ஜீரிய நபர் போலீசால் கைது செய்யப்பட்டார். அவரை புலனாய்வு போலீசார் விசாரித்து, மாநில நீதிமன்றத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.
⚠️ ரயில் சேவை பாதிப்பு
இந்த விபத்தின் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இது பற்றி SBB (சுவிஸ் ரயில்வே) தெரிவித்ததாவது:
ஹோர்கன் மற்றும் “அவ்” சூரிச் இடையிலான ரயில் பாதை முற்றிலும் நிறுத்தப்பட்டு, அரசு மாற்று பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தது. விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்காக, சூரிச் மாநில காவல்துறை மற்றும் (சூரிச்-லிம்மாட்) Zürich-Limmat மாநில அரசு வழக்கறிஞர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
@20min/Kapo ZH