சுவிஸ் முனைவர் ஆசிரியை திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களின் நடன ஆற்றுகை.!! யாழ்/உரும்பையூர் து.திலக்(கிரி) அவர்கள் சுவிற்சர்லாந்திலிருந்து SwissTamilTv இன் ஆளுமைகள் நிகழ்ச்சிக்காக இன்று கலைத்துறையின் ஆளுமை மிக்க ஒரு பெண்மணியை பார்க்கப்போகின்றோம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் உடல் அசைவினாலும் அபிநய நுணுக்கங்களாலும் இனம், மொழி கடந்து பார்ப்போரை கவர்ந்தீர்க்கும் பேராற்றல் கொண்டது பரதக்கலை ஆகும். இக்கலையை கால ஓட்டத்தில் கரைந்தழியவிடாது கடினமான வாழ்வியல் முறைகளுக்குள்ளும் கட்டிக் காத்து எதிர்கால சந்ததிக்கு கடத்தி வரும் காத்திரமான பணியை காலநேரம் பாராது முன்னெடுத்துவரும் சுவிற்சர்லாந்து திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் ஸ்தாபகரும், இயக்குனருமான முனைவர் ஆசிரியை திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களின் நடன ஆற்றுகை மீதான பார்வை இவ்வாரம் விரிகிறது.
ஈழத்திரு நாட்டின் இயற்கை வளங்களால் சூழப்பட்ட திருகோணமலையில் திரு.திருமதி.சோதிநாதன் இரத்தினதேவி தம்பதிகளுக்கு மூத்த புதல்வியாக மதிவதனி பிறந்தார். வாணி சரஸ்வதியின் கருணை பெற்ற பெற்றோர்களால் மதிவதனியின் தந்தையின் சகோதரியான கலாரத்ன, கலாபூசணம் திருமதி இராஜேஸவரி தெட்சணாமூர்த்தி அவர்களிடம் கர்நாடக சங்கீதம், வீணை ஆகிய கலைகளை குருகுல போதனை பெற திருக்கோணேஸ்வரர் அருளாசியுடன் ஆரம்பித்து வைத்தனர்.
மதிவதனி அவர்கள் தனது மூன்றாவது வயதிலேயே திரு/புனிதமரியாள் முன்பள்ளியில் குழந்தைப் பாதங்களைப் பதித்து மாலை நேரங்களில் தானாகவே நடனமாடத் தொடங்கினார். தங்கள் பிள்ளையின் நடனத்தின் மீதான பற்றுதலையும் அபூர்வமான ஆற்றலையும் கண்ட பெற்றோர்கள் 1968அம் ஆண்டு செல்வி.கனகேஸ்வரி சங்கரப்பிள்ளைஅவர்களை குருவாக ஏற்று பரதக் கலையை கற்பித்தனர்.

மேலும் இவரது ஆற்றலுக்கேற்ப செல்வி கோகிலா கந்தையா அவர்களிடம் முறைப்படி பரதநாட்டியக் கலையைக் கற்று கலை நிகழ்வுகளிலும் சிற்றரங்குகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமன்றி இசை ஆர்வமும் மேலிட திருமலை
“தட்சண கான சபா”வில் செல்வி இராஜராஜேஸ்வரியிடம் கர்நாடக இசையைக் கற்று நடனமும் இசையும் இரு கண்ணெனக் கருதி கலையெனும் ஊன்றுகோல் பற்றி படிப்படியாய் நிமிர்ந்தெழுந்தார்.
1970ஆம் ஆண்டில் திருமலை “விக்னேஸ்வரா” நடனக்கலாமன்றத்தில்
செல்வி சாரதா விநாயகராஜா அவர்களிடம் பரநாட்டியத்தினைக் கற்று
“வட இலங்கை சங்கீதசபை” பரீட்சையில் முதன் முதலாகச் சித்தியடைந்தார். தொடர்ந்து செல்வி சுசீலா கொறேரா அவர்களிடமும் பரதநாட்டிய நுணுக்கங்களைக் கற்று கொண்டார். கலைமகள் தேவியின் கருணை இவரை ஆழப் பற்றியதால்
திருமதி பஞ்சாட்சரம் அவர்களிடத்தில் வயலின் இசையையும் கற்கலானார். இளமைப் பருவமதில்
திரு/ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் வரை கல்விகற்று பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான அனுமதியாக யாழ் இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் நடனத்துறைக்கு தெரிவானார்.
திருக்கோணேஸ்வரப் பெருமான் நல்லாசியும் நடராஜப் பெருமானின் திருவருளும் ஒருங்கே அமைய சோ.மதிவதனி யாழ் இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் நடனத்துறையில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
* 1983ஆம் ஆண்டு தொடக்கம் 1986ஆம் ஆண்டு வரை திருமதி அனுசியா மயில்வாகனம், திருமதி சாந்தா பொன்னுத்துத்துரை,
திருமதி லீலாம்பிகை செல்வராசா,
திருமதி பத்மரஞ்சனி உமாசங்கர்
ஆகிய கலை வித்தகர்கள் இவரது நடன ஆர்வத்திற்கு புடம் போட்டு தடம் பதிக்கக் களம் பதித்தனர். இவ் நுண்கலை கற்றல் காலத்தில் கொக்குவில் கலாபவனம் திருமதி
சாந்தினி சிவநேசனிடம் பிரத்தியேகமாக பரநாட்டிய நுணுக்கங்களை கற்றறிந்தார். இக்காலத்தில் யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராகக் கடமையாற்றி கற்றல் கற்பித்தல் செயல்திறனை வீச்சாக்கினார். நான்கு வருட பட்டப்படிப்பினை நிறைவுசெய்த இவர் நடனக்கலைமணி பட்டம் பெற்றார்.
* 1986ஆம் ஆண்டு திரு.செகநாயகம்பிள்ளை சுதாகரன் அவர்களை திருமணம் செய்து இல்லற வாழ்வில் இணைதலாகினார்.
* 1988ஆம் ஆண்டு திருகோணமலையில் “திருக்கோணேஸ்வரர்” நடனாலயத்தை ஸ்தாபித்து ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதநாட்டியக் கலையைக் கற்பித்தார்.
* 1989ஆம்ஆண்டு நடன ஆசிரியர் நியமனம் கிடைக்க திரு/புனித மரியாள் கல்லூரியில் நடன ஆசிரியராகவும், வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சை நடுவராகவும் கடமையேற்றார்.
முதன் முறையாக தான் கற்பித்த பாடசாலையில் மாணவர்களைத் தயார் செய்து தேசியமட்டத்திலான நடனப் போட்டிக்கு தெரிவாக்கி தனக்கான அடையாளத்தைத் நிறுவினார்.
* 1990ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இவர் தமிழ்நாட்டில் பத்மஶ்ரீ அடையார் கே.லட்சுமணன் அவர்களிடம் பரதநாட்டிய நுணுக்கங்களை மேலும் கற்றார்.
* 1992ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்த
திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் 24.10.1992ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் ஐந்து மாணவர்களுடன் “திருகோணேஸ்வரர்” நடனாலயத்தை ஆரம்பித்தார். வெளிநாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், காலநிலை மாற்றம், கடுங்குளிர் நேரங்கள் இவை எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து வாழ்ந்தாலும் நடனத்தைக் கற்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் அதற்கான தனித்துவ கலாச்சார நடன சீருடையை அணிந்து நடனத்தைக் கற்கவேண்டும் என்ற நெறிமுறைக் கருத்தினை மாணவர்கள் மத்தியில் முன்மொழிந்து அதனை அறிமுகப்படுத்தியவரும் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களே.
தாய்நாட்டின் போர்ச்சூழல் காரணமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுள் புதிய கலாச்சாரம் பொருளாதார வளர்ச்சியற்ற நிலை வேலைப்பளு என சிக்குண்ட எம்மக்கள் மத்தியில் கலையை வளர்ப்பதென்பது மிகப்பெரும் சவாலாகவே இருந்தது. இத்தனைக்கும் முகம் கொடுத்து மொழியின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் கலையின்மீதும் பற்றுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தமது பிள்ளைகளை பரதநாட்டியத்தினை முறையாக கற்பதற்காக திருக்கோணேஸவரர் நடன ஆலயமும் குருகுலப் பள்ளியாகவே திகழ்ந்தது.
சுவிற்சர்லாந்தில் சமயாசார வழிபாடுகள், விழாக்கள், கலை, கலாச்சார நிகழ்வுகளில் இவரது நடனப்பள்ளி மாணவர்களின் நடனங்களும் இந்து ஆலயங்களில்
மதிவதனி சுதாகரன் அவர்களின் இசை நிகழ்வுகளும் நடைபெற்றது. இவ் நிகழ்வுகளானது சுவிஸ் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு ஏனைய நாடுகளின் கலாச்சார நெறிமுறைகளுக்குள் வாழும் மக்களும் இக்கலையையும் எமது பாரம்பரிய நிகழ்வுகளையும் கண்டுகளித்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுக்க திருக்கோணேஸ்வரர் நடனப் பள்ளியும் இதன் ஸ்தாபகரும் இயக்குனருமான முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் வித்திட்டார் என்பதும் மறுத்துரைக்க முடியாத நிதர்சனமாகும்.
இக் கலை ஆற்றுகைகளை ஐரோப்பிய வாழ் மக்களும் கண்டுகளித்து மகிழ்ந்தமை நடனக்கலைக்கான அங்கீகாரமாக இருந்தது. திருக்கோணேஸ்வரர் நடனாலயம் செங்காளன், அரோ, துர்கவ், வின்ரத்தூர், சப்கௌசன், ரொமான்சோன் ஆகிய இடங்களிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரதக்கலையை கற்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. நடன ஆசிரியர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் 06.05.1995ஆம் ஆண்டு அன்று திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தை ஆரம்பித்த மூன்று வருடத்தில் செல்வி உமா தனபாலசுப்பிரமணியம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தினை முதற் தடவையாக அரங்கேற்றி சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்வையும் ஆர்வத்தையும் தூண்டி நின்றார். இதன் தொடர்ச்சியாக பிரித்தானியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் நடனக்கலை அரங்கேற்றங்களை நிகழ்த்திவந்தமை சிறப்பம்சமாகிறது.
* 1995ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரர் நடனாலயம் பரதநாட்டியக் கலையுடன் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை போன்ற கலை வகுப்புகளையும் நடாத்திவந்தது. இதில் வீணைக் கலையை திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களே கற்பித்தார்.
* 1996ஆம் ஆண்டு இந்துமா மன்றத்துடன் இணைந்து ஐரோப்பிய மட்டத்தில் பரதநாட்டியப் போட்டிகளை ஆரம்பித்தார்.
* 1997ஆம் ஆண்டு ஐரோப்பிய தமிழ் நுண்கலைப்பீடத்தை உருவாக்கம் செய்து பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை ஆகிய கலைகளுக்கான ஏழு தரவரிசைப் பரீட்சைகளை சுவிற்சர்லாந்தில் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தார்.
* 1998ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற “நாட்டியமயில்” போட்டி நிகழ்வில் திருக்கோணேஸ்வரர் நடனாலய மாணவி
செல்வி டயானி நாகேந்திரம் அவர்கள் கலந்து கொண்டு பலரது வரவேற்பினையும் பெற்றதோடு அந்த ஆண்டிக்கான “நாட்டியமயில்” விருதினையும் பெற்றுக்கொண்டு தனது ஆசிரியைக்கு பெருமை சேர்த்தார். இதன் தொடர்ச்சியாக
1999ஆம் ஆண்டு
செல்வி தர்சிகா தர்மேந்தரன்
2000ஆம் ஆண்டு செல்வி தமாதர்சிகா நகுலேஸ்வரன்
2001ஆம் ஆண்டு செல்வி சுதர்சினி நாகலிங்கம்
2013ஆம் ஆண்டு
செல்வி சுகன்யா சிவம்
2023ஆம் ஆண்டு
செல்வி ரஸ்மியா நவனேசன்.
இவ்வாறாக அதிகளவான நாட்டியமயில்களை உருவாக்கிய பெருமையும், இதுவரை முப்பதாறு (36) மாணவர்களை பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்திய பெருமையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்க நிகழ்வுகளை நிகழ்த்திய பெருமையும் திருமதி மதிவதனி சுதாகரனையே சாரும்.
* 2009ஆம் ஆண்டு இந்தியா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (நடனம்) பட்டப்படிப்பினை முதலாவது தரத்திலும் 2011ஆம் ஆண்டு முதுகலைமானி (நுண்கலை) பட்ப்படிப்பினையும் நிறைவுசெய்த இவர் அதே ஆண்டில் வட இலங்கை சங்கீத சபையின் ஐரோப்பிய நுண்கலைப் பரீட்சை இணைப்பாளராகவும்
2011ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை இந்தியா தஞ்சாவூர் அண்ணாமலைப் பல்கலைக் கழக நுண்கலைப்பீட பரீட்சை இணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டதோடு அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகம் (IITA) முதுநிலை தேர்வு நடுவராகவும் செயலாற்றினார்.
* 2015ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டயத்திற்காக “நடனநோக்கில் தில்லானா” எனும் ஆய்வுக் கட்டுரையை நிறைவு செய்தார். இப்பட்டப்படிப்பு பகுப்பாய்வின் நெறியாளர்
திருமதி மாதவி நடராஜன் அவர்கள்
ஆய்வுக்கான தேடல் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி தெட்சணாமூர்த்தி பிரதீபன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் மட்டக்களப்பு
மிருதங்கவித்துவான்
திரு ஜி.ஆர்.செல்தில்குமார் தஞ்சாவூர்
முனைவர் திரு.நெய்வேலி இராதாகிருஷ்ணன் அவர்கள் இவ் ஆய்விற்கு இவர்களது பங்களிப்பும் அளப்பரியதாக இருந்ததோடு பட்டத்திற்கான தேர்வாளராக அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறை இயக்குனர் எஸ்.சரளா கடமையாற்றியிருந்தார். 24.04.2023 அன்று முனைவர் பட்டத்தை உயர்கல்வி அமைச்சு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுனர் மாண்பை ஆரன் ரவி அவர்களிடம் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம் மீட்டுப்பார்த்து பெருமைகொள்ளத்தக்கது.
* 2016ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் வட இலங்கை சங்கீத சபையின் கலாவித்தகர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் நாற்பது மாணவர்களுக்கான பட்டயங்கள் வழங்கி மதிப்பளித்தார்.
* 2017ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திற்கான இந்தியாவின் தமிழக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இணைப்பாளராகவும் பொறுப்பேற்றார்
* 2018ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான “நாட்டிய தாரகை” போட்டி நிகழ்வில் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி செல்வி மிதுஜா அமிர்தலிங்கம் அவர்கள் “நாட்டியத் தாரகை”விருதை தனதாக்கி சுவிற்சர்லாந்துவாழ் தமிழ் மக்களுக்கும் கற்பித்த ஆசிரியைக்கும் பெருமை சேர்த்தார்.
செல்வி சோதிநாதன் மதிவதனியாக 1968ஆம் ஆண்டு சிறுபராயத்தில் ஆரம்பித்த கலைப் பயணத்தில் பட்ட வலிகள், சோதனை மிகுந்த காலங்கள், துன்பம், துயரங்கள் அனைத்தையும் ஏணிப்படியாக்கி முனைவர் திருமதி மதிவதனி சுதாகரனாக ஐரோப்பிய மண்ணில் முத்திரை பதிக்க பின்னணியில் இவரது கணவர் திரு.சுதாகரன் அவர்கள் இலைமறை காயாக இருந்துவந்தமை மறுக்க முடியாத ஒன்றாகும்.
இவரது இணையத்தள முகவரி
www.thirukoneswararswis.ch
முகநூல் Thirukoneswarar Nadanalayam Zurich Swiss
இவர் பெற்றுக்கொண்ட விருகளும் கௌரவ மதிப்பளிப்புகளும்…
* 1986 நடனக்கலைமணி
யாழ் இராமநாதன் நுண்கலைப்பீடம்
* 1994 சிறந்த நடன ஆசிரியர்
கரோலின் இசைக்கழு சுவிற்சர்லாந்து
*1997 நாட்டியக் கலாவித்தகி
புங்குடுதீவு ஶ்ரீ கணேசா வித்தியாலய பழையமாணவர் சங்கம் சுவிற்சர்லாந்து
*1998 நாட்டியக் கலாசூரி
கிருஷ்ணபக்திக்கழகம் லுட்சேன் சுவிற்சர்லாந்து
* 1998 சகலகலா வித்தகி
இலண்டன் நாட்டியாலய அதிபர் திருமதி இராகினி இராஜகோபால்
* 2003 ஐரோப்பாவின் (சிறந்த கலைச்சேவை ஆசிரியர்)
ஜெயாஞ்சலி நடனாலயம் இலங்கை
* 2007 நடன கலைச் செம்மல்
அனைத்துலக தமிழ்க்கலை ஆய்வுமன்றம்
தஞ்சாவூர் இந்தியா
* 2011 ஆடலரசி
திருமதி லீலாம்பிகை செல்வராசா ஜேர்மனி
* 2011 சுவிற்சர்லாந்தின் சிறந்த கலைச்சேவை ஆசிரியை பாராட்டுப் பட்டயம் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம்
* 2012 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக மாணவியினால் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் இவரது பெயர் பதிவாகியுள்ளது.
* 2013 நிறைகலை எழுத்தாளர் திரு கல்லாறு சதீஸ் சுவிற்சர்லாந்து
* 2013 சாதனையாளர் சிறப்புவிருது
சுவிஸ் தமிழ் கலைமன்றம் சுவிற்சர்லாந்து.
* 2017 கலைப்பணிக்கான பாராட்டுப் பட்டயம்
தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் தமிழ்நாடு இந்தியா
இவ்வாறாக புலம்பெயர் தேசங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயந்திரமயமாக ஓடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மத்தியில் கலைகலாச்சாரப் பண்பாடுகளை பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதும் அதன்பால் இளையவர்களை உள்ளீர்ப்பதுமான மிகப்பெரும் பணியை உறுதிதளராது கலைமீதான பற்றுறுதியுடன் முன்னெடுத்து நடாத்தி வருகிறார் திருக்கோணேஸ்வரர் நடனாயலயத்தின் ஸ்தாபகரும் இயக்குனருமான முனைவர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்கள். காலம் உள்ளவரை இவர்களின் கலையும் அதற்காக ஆற்றிய அளப்பரிய பங்கும் நின்று நிலைத்து வாழும் என்பதே நிதர்சனம். இன்னும் பல அரங்க ஆற்றுகைகளை நிகழ்த்த சுவிஸ்தமிழ் ஊடகவலையம்பின் சார்பில் நாமும் வாழ்த்தி நிறைகிறோம்.