ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் இலங்கை அமைச்சர் விஜித ஹேரத்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. இந்த அமர்வு எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உலகெங்கிலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு சபையின் தலைவர் அழைப்பு விடுத்தார்.
மார்ச் 3ஆம் திகதி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்து மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் வாய்மொழிப் புதுப்பிப்பை மனித உரிமைகள் பேரவை கேட்க உள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெறும் முதலாவது மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இதுவாகும். இதில் பங்கேற்பதற்காக இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜெனீவா வந்துள்ளனர். அமர்விற்கு இணைவாக அரச இராஜதந்திரிகள் பலருடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்ற துணை வெளியுறவுச் செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினேன். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி வர்சன் அகாபெகியன் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அமர்வின் போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பை தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கென அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.