உக்ரைனுக்கான அமைதிப்பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுத்த நாடுகள்!! நிட்வால்டனில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் உக்ரைன் அமைதி மாநாட்டில் கலந்தகொண்ட நாடுகளுக்கிடையில் கலவையான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
ரஷ்யா மற்றும் சீனாவைத் தவிர, 100 நாடுகள் மற்றும் அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தன.
100க்கு 84 பேர் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் அனைத்து அணுசக்தி நிறுவல்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் உக்ரைனின் முழு இறையாண்மைக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் கருங்கடல் பகுதியை சூழவுள்ள துறைமுகங்களுக்கு இலவச அணுகலைப் பெற வேண்டும். மற்றும் அனைத்து போர்க் கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்த உக்ரேனிய குழந்தைகளை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவை உக்ரைனில் ஒரு நிலையான அமைதியைக் கொண்டுவருவதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த அறிக்கை அமைதிக்கான முதல் படியாகும் என தெரிவித்தார்.
ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர், நிரந்தர அமைதியை பெறுவதற்கு சில காலஅவகாசங்கள் தேவைப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் குறிப்பிடுகையில் பொறுமையும் உறுதியும் தேவை என தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியா போன்ற முக்கிய அணிசேரா நாடுகள் குறித்த அறிக்கையில் கையெழுத்திடத் தவறிவிட்டன.