அமெரிக்காவுக்குச் செல்வோர் கவனம்! சுவிஸ் இணைய பாதுகாப்பு நிபுணரின் எச்சரிக்கை
அமெரிக்க எல்லைகளை கடக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள், சமீப காலமாக விமான நிலையத்தில் அவர்களது மொபைல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் சரிபார்க்கப்பட்டபின் நுழைவு மறுக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, சுவிஸ் இணைய பாதுகாப்பு நிபுணர் ஸ்டெபான் கொச், அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
அமெரிக்காவுக்கு செல்லும் போது, தாங்கள் எதையும் தவறாக செய்யவில்லை என்றாலும், மொபைல் போன்கள், சமூக ஊடக கணக்குகள், படங்கள் மற்றும் செயலிகள் அதிகாரிகள் விருப்பத்தின்படி சோதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார். இந்த சோதனையின் போது, பாஸ்வேர்டுகள் மற்றும் மொபைல் அணுகலை (access) கட்டாயமாக வழங்க வைக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால், நீங்கள் உங்கள் மொபைலில் வைத்திருக்கும் தகவல்களில், குறிப்பாக அமெரிக்க அரசியல் அல்லது டொனால்ட் ட்ரம்ப் குறித்த விமர்சனங்களை, முன்கூட்டியே அழித்துவிடுவது நல்லது என அவர் அறிவுறுத்துகிறார். சில சந்தர்ப்பங்களில், ட்ரம்ப் அல்லது அவரது அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கே தடையாக மாறி விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த எச்சரிக்கை, அமெரிக்காவின் கடுமையான எல்லை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், பயணிகள்:
- தங்கள் மொபைலில் தேவையற்ற தகவல்களை முன்பே அழித்துவிடுதல்
- சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்களை பகிர்வதில் கவனம் செலுத்துதல்
- விமான நிலையங்களில் அதிகாரிகளிடம் ஒத்துழைப்பாக இருத்தல்
இவ்வாறு நடந்து கொள்வது அவர்களின் பயண அனுபவத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
@Keystone SDA