சுவிட்சர்லாந்தில் AI மூலம் உருவாகும் குழந்தைகள் குறித்த ஆபாச உள்ளடக்கம் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் தொடர்பான இணைய குற்றச்செயல்கள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் போலி நிர்வாணப் படங்கள் உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கங்கள் அதிகரித்து வருவதாக clickandstop.ch சேவை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் 63 சதவீதம் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக AI மூலம் உருவாக்கப்படும் தவறான மற்றும் குற்றச்செயல்களுக்குரிய படங்களின் அதிகரிப்பு குறிப்பிடப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் இளையோர் இணையத்தில் சைபர் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளின் இலக்காக மாறும் நிலை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மொத்தம் 2,432 இணைய இணைப்புகள் குழந்தைகள் தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்களாக சந்தேகிக்கப்படுவதால் புகாரளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் Fedpol மூலம் பரிசோதிக்கப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், தினமும் சுமார் 190 பேர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த சேவையை முன்னெடுத்து வரும் Swiss Child Protection Foundation மற்றும் Guido Fluri Foundation ஆகிய அமைப்புகள், தொலைபேசி மற்றும் ஆன்லைன் அரட்டை சேவைகளின் நேரத்தை விரிவுபடுத்தும் முன்முயற்சியை இந்த மாதம் தொடங்கியுள்ளன.
டிஜிட்டல் தளங்கள் குழந்தைகள் மற்றும் இளையோரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டாலும், அவை இன்னும் பாதுகாப்பான சூழலாக இல்லை என்பதும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், Guido Fluri அறக்கட்டளை “Internet Initiative” என்ற முயற்சியை மார்ச் 3ஆம் தேதி அறிமுகப்படுத்தி, இணைய தளங்களின் பொறுப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
அதேவேளை, Swiss Child Protection Foundation வரும் கோடைகாலத்தில் “குழந்தைகள் மற்றும் இளையோருக்கு எதிரான இணைய பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஒன்றிணைவோம்” என்ற தேசிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான அவசரத் தேவையை வெளிப்படுத்துகின்றன.