சுவிஸ் மலைப்பகுதிகளில் ஓட்டுனர் விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள்.!!
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பாதைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டும் வெளிநாட்டு டிரைவர்களைப் பற்றி செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. குறிப்பாக, பிரிட்டனில் இருந்து வரும் சிலர் hairpin வளைவுகள் நிறைந்த அபாயகரமான சாலைகளிலும் விதிகளை மீறி சென்ற சம்பவங்கள் முன்பே பதிவாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் 51 வயதான ஒரு பிரிட்டிஷ் நபரை கிராவுன்டன் போலீசார் ஜூலியர் மலைப்பாதையில் பிடித்தனர். அந்த பகுதியில் வேக வரம்பு மணிக்கு 80 கிலோமீட்டர் என்ற நிலையில், அவர் தனது காரை மணிக்கு 151 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்துக்குப் பிறகு போலீசார் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, அவரது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு, கிராவுன்டன் மாநில வழக்கறிஞரிடம் புகார் அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சுவிஸ் மலைப்பாதைகளில் இத்தகைய அதிவேக ஓட்டங்கள் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© KeystoneSDA