சூரிச்சில் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கு அமெரிக்க நிறுவனத்தின் அதிரடி சம்பளம்
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பணிபுரியும் திறமையான நிபுணர்களை ஈர்க்க அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட Anthropic நிறுவனம் மிக உயர்ந்த சம்பளங்களுடன் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் காலிஃபோர்னியாவில் இயங்கும் AI பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
Anthropic நிறுவனம் சூரிச்சில் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான வருடாந்திர சம்பளம் 2,80,000 முதல் 6,80,000 சுவிஸ் ஃப்ராங்க் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அளவில், இது மாதத்திற்கு சுமார் 56,000 ஃப்ராங்க் வருமானமாகும். சுவிட்சர்லாந்து போன்ற உயர் வாழ்க்கைச் செலவு கொண்ட நாட்டிலும் கூட இந்த அளவிலான சம்பளம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார பேராசிரியர் Michael Siegenthaler, செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கத்தில் முன்னணியில் உள்ள திறமையாளர்களை பெறுவதற்கான கடும் போட்டி தற்போது உருவாகி வருவதாக கூறினார். இந்த சம்பள அளவுகள் யதார்த்தமற்றவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்து AI துறையில் உலகளவில் முன்னணி நாடாக மாறி வருவதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான AI Index அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 100,000 மக்களுக்கு 110.5 AI ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் அதிக AI நிபுணர்கள் அடர்த்தி கொண்ட நாடாக சுவிட்சர்லாந்தை முதலிடத்தில் நிறுத்தியுள்ளது.
உயர் தரமான கல்வி அமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், மற்றும் சர்வதேச நிறுவனங்களின் முதலீடு ஆகியவை இணைந்து சுவிட்சர்லாந்தை AI துறையில் முக்கிய மையமாக மாற்றியுள்ளன. இதனால் உலகின் முன்னணி நிறுவனங்கள் சூரிச்சை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி, திறமையான நிபுணர்களை அதிக சம்பளங்களுடன் ஈர்க்க முயற்சித்து வருகின்றன.