பணியிடத்தில் மறைமுகமாக வீடியோ எடுத்த நபர் தண்டனை: சூரிச்சில் அதிர்ச்சி சம்பவம்
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் Affoltern am Albis மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர், தனது பெண் சக ஊழியர்கள் கழிப்பறைக்கு சென்றபோது அவர்களை மறைமுகமாக படம் பிடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவங்கள் 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபர், கழிப்பறை பிரிப்புச் சுவரின் வழியாக ரகசியமாக தனது கைப்பேசியைப் பயன்படுத்தி வீடியோக்கள் எடுத்துள்ளார். மொத்தம் ஆறு பெண் பணியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சம்பவத்தில், அவர் ஒருவரான ஆண் பணியாளரையும் படம் பிடித்ததாக விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தினசரி 30 சுவிஸ் ஃப்ராங்க் வீதம் 180 நாள் அபராதமும், கூடுதலாக 2,000 ஃப்ராங்க் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில், அவர் Zurich நகரில் தன்னுடன் வசித்திருந்த தனது இரண்டு மைத்துனிப் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்திருந்தது தெரியவந்துள்ளது.

அதே காலப்பகுதியில், வீட்டில் உணவு மேசையின் கீழ் இருந்து அந்தப் பெண்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது வீடியோ பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அவரது கைப்பேசியில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் அவர் தனது தொலைபேசியில் தனிப்பட்ட கோப்பகத்தில் சேமித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்செயல்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தது என்பது தண்டனை ஆணையில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 2 ஆண்டுகள் பரிசோதனை கால நிபந்தனையுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்த அனைத்து மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு மொபைல் தொலைபேசிகள், ஒரு லேப்டாப், ஒரு டேப்லெட், இரண்டு Extanal ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் நான்கு நினைவக அட்டைகள் அடங்கும்.