2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் படைத்துறையின் ஒருங்கிணைப்புத் தளபதியுமான மாவீரர் பொட்டு அம்மான் அவர்கள் உட்பட உறுதிப்படுத்தப்பெற்ற இருபத்து நான்கு மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகள், 02.05.2026, சனிக்கிழமை பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் மிகவும் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றன.
சுவிற்சர்லாந்து நாட்டில் சொலத்தூன் மாநிலத்தில் இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வு மாலை 3:00 மணிக்கு, போராளி திரு. துளசிச்செல்வன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை செயற்பாட்டாளர்களான திரு. சுதா, திரு. பிரான்சிஸ் அல்பேட், திரு. பூபாலப்பிள்ளை கோபாலசிங்கம், திருமதி குகன் கஜேந்தினி, போராளி திரு குகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தேசியக் கொடியினைப் போராளி முல்லை அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இருபத்து நான்கு மாவீரர்களினதும் திருவுருவப் படங்களுக்கும் பொட்டு அம்மான் அவர்களின் குடும்பப் படத்திற்கும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தலைவர் அவர்களின் மகள் மாவீரர் துவாரகா/ அகமதி புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் மாவீரர் பொட்டு அம்மான் அவர்களின் மகன் மாவீரர் பார்த்தீபன்/ சாதுரியன், பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் மகள் மாவீரர் மான்மதி, தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் மாவீரர் பா. நடேசன் அவர்களின் மகள் மாவீரர் தமிழ்மதி ஆகிய இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகளின் விடுதலைப் போராட்டத்திற்கான தியாகம் வெளிப்படுத்தப்பட்ட தருணத்தில் கூடியிருந்த மக்களிடம் ஏற்பட்ட உணர்வுகளைச் சொற்களால் விவரிக்க முடியாது.
ஒவ்வொரு மாவீரர்களினதும் சாதனைகளும் தியாகங்களும் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பகரப்பட்டன. மாலை 6.30 மணியளவில் தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.