அன்னை பூபதி அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவெழுச்சி விளையாட்டுப் போட்டிகள்
இந்திய அமைதிப்படையைத் திரும்பப்பெற வேண்டும், விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, 1988 மார்ச் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து, தன்னைத் தியாகம் செய்த வீர வணங்கி அன்னை பூபதி அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளை நினைவுகூர்ந்து, சுவிட்சர்லாந்தில் 2025 மே 25 ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விளையாட்டுத் துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில், கழகங்களின் பங்களிப்புடன் வீரர் நெஞ்சத்தில் சுடரொளி ஊட்டும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வு பொதுச் சுடரேற்றல், தேசியக் கொடி ஏற்றல், ஈகைச் சுடரேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. தமிழரின் வீரவரலாற்றையும் தியாகத்தையும் புதிய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும், தமிழ்த்தேசிய உணர்வைப் பரப்பும் முயற்சியாகவும் இப்போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன.

போட்டிகள் வரிசையில் உதைபந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் உள்ளிட்ட அணிகள் சார்ந்த போட்டிகளும், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான சுவட்டுமைதான மெய்வல்லுனர் (Athletics) போட்டிகளும் தீவிரமாகவும் ஆர்வத்துடனும் நடைபெற்றன. போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் தங்களின் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற கழக வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக தாரகமந்திர ஓதலுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. இந்நிகழ்வின் மூலம் வீரச்சுடரையும், தேசத்தின் விடுதலைப்போரையும், தியாக சிந்தனையையும் மறவாமல் பசுமைத் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஒரு முக்கியமான பங்காக இப்போட்டி அமைந்தது.
@தமிழீழ விளையாட்டுத்துறை