ஐன்சீடெல்ன் தேவாலயத்தில் பரபரப்பு : மாதாவின் ஆடையை அகற்றிய இளைஞன்.!! கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஐன்சீடெல்ன் தேவாலயத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேவாலயத்தில் உள்ள கறுப்பு மாதா சிலையின் ஆடைகளை ஒரு இளைஞன் அகற்றி சிலையின் தலையில் இருந்த கிரீடத்தை தனது தலையில் தூக்கி வைத்த சம்பவம் அங்குள்ள பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரார்த்தனை செய்யும் பல பக்தர்கள் முன்னிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.குறித்த சம்பவம் பற்றி சுவிட்சர்லாந்தில் முன்னணி ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான காணொளி ஒன்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வருகை தரும், 15 ஆம் நூற்றாண்டிலிருந்து மிகவும் போற்றப்படும் அதிசய தேவாலயமாக அனைவராலும் போற்றப்படும் ஒரு தேவாலயம் இதுவாகும். குறித்த அசம்பாவித சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகம் குறிப்பிடுகையில், “இதற்கு மேல் எதுவும் நடக்காததற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, யாருக்கும் தீங்கு விளைவிக்காததற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என தெரிவித்துள்ளது.
(c) Adrian Baer / NZZ
மேலும் Einsiedeln (ஐன்சீடெல்ன்) மடாலயம் இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் அடைவதாகவும் தெரிவிக்கிறது. “உள்ளூரில் மத உணர்வுகள் புண்படுத்தும் பலரைப் பற்றி நாங்கள் அறிகிறோம். எங்களின் பிரார்த்தனைகளும் எண்ணங்களும் அவர்களுக்காகவும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபருக்காகவும் இருக்கும் என தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயது புகலிடக் கோரிக்கையாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உளவியல் பிரச்சனைகள் உள்ள இளைஞன் எனவும் மருத்துவ உதவிகள் தற்போது வழங்கப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இளைஞன் தேவாலயத்திற்கு வருவதற்கு முன்னர் ரப்பர்ஸ்வில் பகுதியில் இருந்து ரயிலில் பயணம் செய்துள்ளதாகவும் ரயிலில் பல பயணிகளை தொந்தரவு செய்துள்ளதோடு சத்தமிட்டுக்கொண்ட பயணித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பயணத்தின் போது ஒரு பெண்ணை துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.