சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் கார்களின் கொள்வனவில் வீழ்ச்சி சுவிட்சர்லாந்தின் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்திய தரவுகளின் படி இலத்திரனியல் கார் கொள்வனவுகள் மந்தநிலையைக் காட்டுவதாக bonus.ch என்ற இணையத்தளத்தின் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் வழங்கிய புள்ளிவிவரங்களின் படியும் இலத்திரனியல் கார்களின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 2021 இல் 13 சதவீதமான இலத்திரனியல் கார்களுக்கான பதிவுகளில் இருந்து 2022 இல் அது 18 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 2023 இல் பெரிய அளவிளலான வளர்ச்சி பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கார் வாங்குவதில் பலர் தற்போது ஆர்வம் காட்டாமைக்கு பல்வேறு காரணிகள் குறிப்பிடப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த பலர், ரீசார்ஜ் செய்யக்கூடிய கார்களில் எந்த நன்மையையும் இல்லை எனவும், இன்னும் சிலர் பேட்டரிகள் உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி கவலைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சிலர், அதிக கொள்முதல் செலவுகள் மற்றும், சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், இலத்திரனியல் கார்களின் கொள்வனவு தொடர்பான கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 18 சதவீதமானவர்கள் இன்னும் மின்சார காரை வாங்குவதற்கு விரும்பம் தெரிவித்திருந்தனர்.