ஆர்காவ் கன்டோனின் லிம்மட் ஆற்றில் விழுந்து 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு நபர் ஆற்றங்கரையில் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஆர்காவ் கன்டோனல் காவல்துறையின் அறிக்கையின்படி, நேரில் பார்த்தவர்கள் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் காவல்துறை அவசர அழைப்பு மையத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போலீஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஆற்றில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்னும் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் மீட்டகப்பட்ட இளைஞன் 24 வயதான சுவிஸ் நாட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காணாமல் போன 27 வயது இளைஞனைத் தேடும் நடவடிக்கை தோல்வியில் முடிந்ததால்இ அதிகாலையில் அது நிறுத்தப்பட்டது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெட்டிங்கனில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் குறித்த இளைஞனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது 24 வயதான அவர் ஒரு தனிப்பட்ட விருந்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். தோழர்கள் அவரைத் தேடியுள்ளார்கள்.
பின்னர் லிம்மாட் கரையில் அவரைக் கண்டுபிடித்தனர். மற்றைய இளைஞன் ஆற்றில் விழுந்த தனது நண்பனுக்கு உதவி செய்ய முற்பட்ட வேளையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். எனினும் இச்சம்பவம் பற்றிய முழுமையான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.