ஆர்காவ் கன்டோனில் கடந்த சில நாட்களில் பல திருட்டு சம்பவங்களும் வழிப்பறி கொள்ளையும் இடம்பெற்றுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருகையில் :-
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிப்பறி திருட்டுகளும் பல வானங்களில் கொள்ளைச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 6. 2024 சனிக்கிழமை காலை, சுமார் 5:30 அளவில் ஆர்காவ் கன்டோன் வூரன்லோஸ் பகுதியில் வசிக்கும் ஒருவர் அவசர போலீசுக்கு தகவல் அளித்தார்.
இவர் தனது மகனின் வீட்டில் இனந்தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபடமுற்பட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல போலீஸ் ரோந்து படைகள் பணியில் இறங்கி அடையாளம் தெரியாத நபரை தேடும்முயற்சியில் ஈடுபட்டன.
அரை மணி நேரம் கழித்து புகார் அளித்தவர் கொடுத்த அங்க அடையாளங்களுடன் இரண்டு நபர்களை அவதானித்த போலீசார் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் புகலிடம் கோரி விண்ணப்பித்த 25 வயது மற்றும் 17 வயது அல்ஜீரியர் என நம்பப்படுகிறது. மேலதிக விசாரணைக்காக அவர்கள் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்றைய தினம் காலை இன்னும் பல திருட்டு சம்பவங்கள் அதே பகுதியில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கும் இவர்கள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக ஆர்காவ் கன்டோனல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.