ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டாருக்கு மாறும் நிலை.!
சுவிட்சர்லாந்தின் நிர்வாக மையமான பெடரல் கவுன்சில், ஜூன் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூட்டத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனங்களுக்கு 269 மில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு, சமீபத்தில் சில உறுப்பினர் நாடுகள் அவர்களது நிதியுதவிகளை குறைத்தது அல்லது நிறுத்திவிட்டதால், ஜெனீவாவை தளமாகக் கொண்ட பல முக்கிய சர்வதேச நிறுவனங்கள் கடுமையான நிதிச் சவால்களை எதிர்கொண்டு வருவதை ஒட்டி எடுக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பல அமைப்புகள் தங்களது பணிச்செலவுகளை குறைக்க, ஊழியர்களை தள்ளுபடி செய்ய, அல்லது வேறு நாடுகளுக்கு தங்களது அலுவலகங்களை மாற்றும் எண்ணத்தையும் முன்வைக்கின்றன,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், கத்தாரின் தலைநகரான டோஹா, ஐ.நா. அமைப்புகளுக்கு புதிய தலைமையகமாக வர முனைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், “சமீபத்திய நிதிப் பற்றாக்குறையை குறைப்பதுடன், ஐ.நா. தலைமையகமாக ஜெனீவாவின் நிலையை நீடிக்கவும் பாதுகாக்கவும்” இந்த நிதி முடிவுகள் முக்கியமான பங்காற்றும் என்று பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இந்த ஜெனீவா நகரம், சுவிட்சர்லாந்தின் நலன்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.