சூரிச்சில் புலம்பெயர்ந்தவர்களின் வேகமான முற்னேற்றம் : வெளியான அறிக்கை
சூரிச் மாநிலத்தில் மக்கள் இன்று மூன்று தசாப்தங்களுக்கு முன் இருந்ததைவிட சராசரியாக ஆண்டுக்கு 15,100 ஃப்ராங்குகள் அதிகம் சம்பாதிக்கின்றனர். விலை உயர்வை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்ட இந்த வருமான உயர்வு சுவிஸ் சராசரியைவிட ஐந்தில் ஒரு பங்கு அதிகம். குறிப்பாக பெண்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சூரிசில் ஒரு தொழிலாளியின் ஆண்டு மொத்த வருமானம் சராசரியாக 86,500 ஃப்ராங்குகளாக இருந்தது. இது 1990களின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் 21 சதவீத உயர்வாகும். அதிகமானோர் உயர்கல்வி பெற்றிருப்பதும், மக்கள் தொகை இளமையாக இருப்பதாலும் வேலை பங்கேற்பு அதிகரித்திருப்பது சூரிசின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும் பெண்கள் வேலை சந்தையில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளனர். முழுநேர வேலைக்கு இணையான அளவில் அவர்கள் பங்கேற்பு 17 சதவீதம் உயர்ந்து 65 சதவீதத்தை எட்டியுள்ளது. அதேசமயம் ஆண்களின் பங்கேற்பு 7 சதவீதம் குறைந்தாலும், மொத்தப் பங்கேற்பு ஓரளவு உயர்ந்துள்ளது. வருமான வளர்ச்சியிலும் பெண்கள் ஆண்களை விட வேகமாக முன்னேறியுள்ளனர்.

முப்பது ஆண்டுகளில் பெண்களின் வருமானம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு – மேம்பட்ட கல்வியும், அதிக ஊதியம் தரும் துறைகளில் அவர்கள் சேர்ந்திருப்பதும் காரணமாகும். இருப்பினும், குறிப்பாக 55 வயதிற்கு மேற்பட்டோரில் ஆண்கள்-பெண்கள் வருமான வித்தியாசம் இன்னும் 49 சதவீதமாக காணப்படுகிறது.
வெளிநாட்டு புலம்பெயர்ந்தவர்களும் சூரிசில் வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளனர். இன்று அவர்களில் 46 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றுள்ளனர், இது சுவிஸ் குடிமக்களிடையே 34 சதவீதம் மட்டுமே.
சூரிசின் பொருளாதார இயக்குநர் கார்மென் வாக்கர் ஸ்பே, இந்த முடிவுகள் மாநிலத்தின் வளமான வளர்ச்சியை காட்டுவதாகக் குறிப்பிட்டார். பாலினம், வயது, குடியேற்ற நிலை எதுவாக இருந்தாலும் அனைவரின் வருமானமும் உயர்ந்திருப்பது சூரிசின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு நேரடியாக பலன் அளித்திருப்பதை நிரூபிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
© KeystoneSDA