ப்ரீபோர்க் (Fribourg) இல் தாய் மற்றும் சிசு கொலைக்கு எதிராக பேரணியில் இறங்கிய மக்கள்
சுவிட்சர்லாந்தில் ஒரு தாயும் குழந்தையும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், பெண் கொலைகளுக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை, சுவிட்சர்லாந்தின் Fribourg நகரிலுள்ள வீடொன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை உருவாக்குவதாக அமைந்திருந்தது. ஆம், 30 வயதுப் பெண்ணொருவரும், அவரது பச்சிளங்குழந்தையும் அங்கு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்தார்கள்.
அந்தப் பெண்ணின் கணவரும் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், தன் மனைவியையும் குழந்தையையும் கத்தியால் குத்திக் கொலை செய்தது தான்தான் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அந்தப் பெண் மற்றும் குழந்தையின் கொலையைத் தொடர்ந்து, Fribourg நகர மக்கள் சுமார் 300 பேர் பேரணியில் இறங்கினார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை அதிகப்படுத்த வலியுறுத்தி அவர்கள் பேரணி நடத்தினார்கள்.
இந்த தாய் மற்றும் குழந்தை கொலையுடன் சேர்த்து, இது சுவிட்சர்லாந்தில் பெண்கள் கொல்லப்படும் 19ஆவது சம்பவமாகும். Fribourg நகரில், இது இரண்டாவது சம்பவம். ஏப்ரல் மாதம், தன் மனைவியின் அலுவலகத்துக்குச் சென்ற ஒருவர், தன் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு, அங்கேயே தன்னைத்தான் சுட்டு தன் உயிரையும் மாய்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.