லௌசான் நெடுஞ்சாலையில் நிர்வாணமாக போராட்டம் நடத்திய பெண்: ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் லௌசான் நகரம் அருகே உள்ள A9 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. மதியம் 4.15 மணியளவில், ஒரு பெண் தன் காரை நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் நிறுத்தி, நிர்வாணமாக வாகனத்திலிருந்து இறங்கி, அரசியல் கோஷங்கள் எழுப்பியதால், அந்த வழியாக சென்ற ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சாட்சிகளின் கூற்றுப்படி, பெண் லௌசான்–ப்ளேஷெரெட்டே EXIT பகுதியில் காரை நிறுத்தி, வாகனத்திலிருந்து இறங்கிய பின்னர் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி நின்றார். அப்போது அவர் பல கோஷங்களை எழுப்பினார், ஆனால் அவை தெளிவாக புரிந்துகொள்ளப்படவில்லை. “நான் என் கண்களை நம்ப முடியவில்லை. நெடுஞ்சாலையில் ஒரு பெண் நிர்வாணமாக ஏறி நின்றிருந்தார்,” என ஒரு சாட்சியாளர் கூறினார்.
இதையடுத்து பல ஓட்டுநர்கள் உடனடியாக போலீசை அழைத்து தகவல் தெரிவித்தனர். வாட் மாநில காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணை கட்டுப்படுத்தியது. பின்னர் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், அந்த பெண் அரசியல் நோக்கத்துடன் போராட்டம் நடத்தியதாக உறுதிப்படுத்தினர். ஆனால், அவர் எந்த அமைப்புடன் தொடர்புடையவர் என்ற விவரம் இதுவரை வெளிவரவில்லை.
தற்போது பெண் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது அவரது செயல் மனநிலைச் சிக்கலால் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை. இதே நெடுஞ்சாலையில் 2022 ஆம் ஆண்டிலும் ‘ரெனொவேட் ஸ்விட்சர்லாந்து’ (Renovate Switzerland) இயக்கத்தினர் நடத்தி நெடுஞ்சாலை மறியல் போராட்டத்துக்காக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தின் போது நெடுஞ்சாலை போக்குவரத்து சில நிமிடங்கள் மட்டுமே தடைபட்டது. எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், நிலைமை விரைவில் சீரானது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.