சுவிட்சர்லாந்து அரசு பட்ஜெட்டில் குறைவு என அறிவித்தாலும் இறுதியில் அதிக இருப்பு: காரணம் என்ன?
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தனது தேசிய பட்ஜெட்டை அறிவிக்கும் போது பொதுவாக ஒரு குறைவு இருப்பதாகவும், அதனால் அரசுச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்துகிறது. இதன் பின்னர் பல திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படுவதோ அல்லது சில திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்படுவதோ நடைபெறுகிறது. ஆனால் நடைமுறையில் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் கணக்குகள் பல நேரங்களில் வேறொரு கதையைச் சொல்கின்றன.
இந்த நிலைமை பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அரசாங்கம் பெரிய அளவில் பட்ஜெட் பற்றாக்குறை இருப்பதாக கூறினாலும், வருட இறுதியில் வெளியிடப்படும் உண்மையான கணக்குகளில் சில சமயங்களில் எதிர்பாராத அளவில் அதிக இருப்பு (surplus) பதிவாகிறது. இதனால் அரசின் ஆரம்ப கணிப்புகள் மற்றும் இறுதி நிதி நிலைமைகளுக்கு இடையே பெரிய வேறுபாடு உருவாகிறது.
இதற்கான ஒரு தெளிவான உதாரணமாக 2025 ஆம் ஆண்டை எடுத்துக்கொள்ளலாம். சுவிட்சர்லாந்து பொது ஒளிபரப்பு நிறுவனம் RTS வெளியிட்ட தகவலின்படி, அந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் மத்திய அரசு சுமார் 815 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும் என ஆரம்பத்தில் கணித்திருந்தது. ஆனால் ஆண்டு முடிவில் வெளியிடப்பட்ட இறுதி கணக்கில் 259 மில்லியன் ஃப்ராங்க் அதிக இருப்பு பதிவாகியுள்ளது. இதனால் ஆரம்ப கணிப்புக்கும் இறுதி கணக்குக்கும் இடையே ஒரு பில்லியன் ஃப்ராங்கை விட அதிகமான வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை ஒரு தவறான கணிப்பா அல்லது திட்டமிட்ட செயலா என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, மத்திய அரசில் உள்ள நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை பெரிதாகக் கணித்து, அதே நேரத்தில் வருவாயை குறைவாக மதிப்பீடு செய்வது வழக்கமான நடைமுறையாகிவிட்டது என்பதாகும். இதுவே ஆண்டின் இறுதியில் கணக்குகள் வெளியிடப்படும் போது எதிர்பார்த்ததை விட நல்ல நிலைமையை உருவாக்குகிறது.
ஆனால் இது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செய்யப்படுவது அல்ல என்று நிபுணர்கள் விளக்குகின்றனர். லுகானோ நகரில் உள்ள அரசியல் பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான ஃபாப்ரிசியோ மாச்சோன்னா (Fabrizio Mazzonna) கூறுவதாவது, இது பெரும்பாலும் சுவிஸ் அரசியல் கலாச்சாரம் மற்றும் மனப்பான்மையுடன் தொடர்புடையதாகும். சுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக மிகவும் எச்சரிக்கையுடனும் அபாயங்களை தவிர்க்கும் மனப்பான்மையுடனும் செயல்படுவார்கள். அதே நேரத்தில் வெற்றிகளை மிகைப்படுத்திக் கூறுவதையும் அவர்கள் விரும்புவதில்லை.
அரசாங்கம் இந்த அணுகுமுறையை “எச்சரிக்கையான நிதி மேலாண்மை” என்ற அடிப்படையில் பின்பற்றுகிறது என்று அவர் விளக்குகிறார். மேலும் சில மத்திய அரசுத் துறைகள் ஆண்டிற்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் பயன்படுத்தாமல் இருக்கக்கூடும். இதனால் ஆண்டின் இறுதியில் பயன்படுத்தப்படாத தொகை அதிக இருப்பாக மாறும். சுவிஸ் நிர்வாகத்தின் மற்றொரு தனிச்சிறப்பாக செலவுகளை கவனமாக பயன்படுத்தும் பழக்கமும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு மேலும் ஒரு முக்கிய காரணமாக சுவிட்சர்லாந்தின் அரசியல் அமைப்பில் உள்ள “கடன் கட்டுப்பாட்டு விதி” அல்லது debt brake குறிப்பிடப்படுகிறது. இது அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரு நிதி கட்டுப்பாட்டு விதியாகும். இந்த விதியின் அடிப்படையில் அரசு சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யக்கூடாது.
மாச்சோன்னா கூறுவதாவது, “பற்றாக்குறையை அனுமதிக்காத ஒரு சட்டம் இருந்தால், பட்ஜெட் கணிப்புகளில் இயல்பாகவே மிகவும் எச்சரிக்கையான அல்லது குறைவான மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. இந்த விதி நீண்டகால கட்டமைப்பு பற்றாக்குறையை தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. அரசியல் சூழலிலும் பற்றாக்குறை என்பது நிர்வாக தவறாக பார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எச்சரிக்கை மனப்பான்மை மற்றும் அரசியல் கலாச்சாரம் ஒன்றுக்கொன்று வலுவூட்டுகின்றன என்றும் அவர் கூறுகிறார். இந்த அணுகுமுறையின் காரணமாக சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் பல நாடுகளை விட சிறந்த நிதி நிலையை கொண்டுள்ளது.
பொது கடன் அளவைப் பொருத்தவரை, சுவிட்சர்லாந்து ஐரோப்பாவில் மிகக் குறைந்த கடன் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது என்று மாச்சோன்னா குறிப்பிடுகிறார். இது பல ஆண்டுகளாக கடுமையான நிதி ஒழுங்கை கடைப்பிடித்து வந்த அரசியல் அணுகுமுறையின் விளைவு என்றும், அந்த அணுகுமுறைக்கு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பொதுவாக ஆதரவு அளித்து வந்துள்ளன என்றும் அவர் விளக்குகிறார்.
சுருக்கமாகக் கூறினால், சுவிட்சர்லாந்து அரசு தனது பட்ஜெட்டில் எச்சரிக்கையான கணிப்புகளை மேற்கொள்வது சில நேரங்களில் ஆரம்பத்தில் குறைவு இருப்பதாக தோன்றினாலும், இறுதியில் வலுவான நிதி நிலையை உருவாக்க உதவுகிறது. இந்த அணுகுமுறை தான் நாட்டை ஐரோப்பாவில் நிதி ஒழுங்கில் முன்னணியில் நிறுத்திய முக்கிய காரணங்களில் ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர்.