சுவிட்சர்லாந்திற்குள் குற்றச்செயல்களில் ஈடுபடும் துருக்கிய மாபியாக்கள் தொடர்பில் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் துருக்கிய மாபியாவின் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுவிஸ் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குற்றவியல் குழுக்கள் போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத சூதாட்டம், தொலைபேசி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துருக்கிய மாபியா முதலில் ஜெர்மனியில் வேரூன்றியிருந்தது; ஆனால் தற்போது அவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் தாக்கத்தை விரிவுபடுத்தி வருகிறார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்குழுக்களில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டதால், வன்முறை அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய தலைமுறை ஆயுதங்களைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்கும் மனநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் தெருவோர துப்பாக்கிச் சூட்டுகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்திலும் போட்டியாளர்களுக்கிடையே திறந்தவெளி மோதல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம் பெரும் லாபத்தை தருவதால், எல்லோரும் போதுமான அளவு சம்பாதிக்கும் வரை நிலைமை சுமாராக அமைதியாக இருக்கும் எனவும் ஆனால் போட்டி அதிகரிக்கும் போது மோதல்கள் தவிர்க்க முடியாததாகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட குற்றவியல் குழுக்கள் செயல்படுகின்றன. இதில் சில சுவிட்சர்லாந்திலும் இயங்கி வருவதாகவும் இவர்களின் செயற்பாடுகளினால் பல்வேறு அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து உலகளாவிய போதைப்பொருள் வணிகத்தில் கடத்தல் மற்றும் பரிமாற்ற மையமாகவும், இலக்கு நாடாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னால் உள்ள நிதி மற்றும் குற்றவியல் வலையமைப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© Tamilnews