சூரிச் நகரில் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள்: திருட்டு மற்றும் கொள்ளை முயற்சிகள் முறியடிப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் கடந்த வார இறுதியில் மற்றும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பாக மூன்று தனித்தனியான சம்பவங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளை சூரிச் நகர போலீசார் (Stadtpolizei Zürich) மேற்கொண்டுள்ளது.
டிசம்பர் 20, 2025 சனிக்கிழமை இரவு 9 மணியளவில், Zürich கிறிஸ்துமஸ் சந்தையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தை வர்த்தக ஸ்டால்களை விட பார்வையாளர்களையே கவனித்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்களை சந்தேகத்தின் பேரில் கண்காணித்தனர். தொடர்ந்து மேற்கொண்ட கவனிப்பில், ஒரு இளம்பெண்ணின் ஜாக்கெட் பாக்கெட்டிலிருந்து கைபேசியை திருடும் காட்சியை போலீசார் நேரில் கண்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அவர்கள், 23 வயதுடைய அல்ஜீரிய குடிமகன் ஒருவரையும், 29 வயதுடைய மொரோக்கோ குடிமகன் ஒருவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 22 திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்பாக, Zürich Kreis 5 பகுதியில் உட்புகுந்து திருட முயன்றதாக ஒரு புகார் கிடைத்தது. சில நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைந்த போலீசார், ஒரு நபரை சோதனை செய்ததில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரம்ப விசாரணையில், 22 வயதுடைய ஸ்பெயின் குடிமகனான அந்த நபர், இதற்கு முன்பும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதே நாள் காலை 5.30 மணியளவில், Europaallee பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் உள்ள ஒரு விற்பனை ஸ்டாலில் உட்புகுந்து கொள்ளை முயற்சி நடந்ததாக பாதுகாப்பு பணியாளர்கள் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார், 20 வயதுடைய குரோஷிய குடிமகளான பெண்ணை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பொது இடங்களில், குறிப்பாக திருவிழா மற்றும் கிறிஸ்துமஸ் சந்தைகள் நடைபெறும் காலங்களில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சூரிச் நகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
© Kapo ZH