பேர்க்லென் பகுதியில் கார் உடைப்பு முயற்சி – ஒருவரை பொலிசார் கைது
சுவிட்சர்லாந்தின் (ஊரி) Uri கன்டோனில் அமைந்துள்ள Bürglen (பேர்க்லென்) பகுதியின் Grossgrund வட்டாரத்தில், வெள்ளிக்கிழமை 2025 டிசம்பர் 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 4.45 மணியளவில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை உடைக்க முயன்றதாக அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் கன்டோன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அந்தப் பெண்ணின் தகவலின் பேரில், மிதிவண்டிகளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள் கார் உடைப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பல பொலிஸ் அணிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கையை தொடங்கின.
தேடுதல் நடவடிக்கையின் போது, ஒருவரை பொலிசார் பிடித்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் எனவும், அவருக்கு சுவிட்சர்லாந்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது, அவர் திருடப்பட்ட ஒரு மின்சார மிதிவண்டியையும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும் வைத்திருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை பல திருட்டுகளிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் இன்னும் தப்பியோடிய நிலையில் உள்ளதாகவும், அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கன்டோன் பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
© Kapo Uri