வோட் கன்டோனில் தேவாலயத்தில் தீ விபத்து: பெண் ஒருவரிடம் விசாரணை
வோட் கன்டோனில் உள்ள லு சென்டியர் (Le Sentier) பகுதியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் ஆரம்ப தகவல்களின் படி, தேவாலயத்தின் பலிபீடம் அருகில் இருந்த பைபிள் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த உடனே அங்கு இருந்த பாதிரியார் தீயை கட்டுப்படுத்த முயன்று, தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே அதை அணைக்க முடிந்தது.
ஆனால், தீயை அணைக்கும் போது புகையை சுவாசித்ததால் பாதிரியார் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தால் தேவாலயத்தின் உள்ளகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுவிஸ் பெண் ஒருவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஐரோப்பாவில் வழிபாட்டு தலங்களில் ஏற்படும் பாதுகாப்பு சம்பவங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவமும் அதற்கான கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
WRS