பேர்ன் அருகே பேருந்தில் சந்தேக நபர் கைது: பயணிகள் பதற்றம்
சுவிட்சர்லாந்தின் பேர்ன் (Bern) நகர புறநகரான ஒஸ்டர்முண்டிகன் (Ostermundigen) பகுதியில், சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது பேருந்தில் பயணித்த அந்த நபர், வாகனத்தின் உள்ளே ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரது நடத்தை மற்ற பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாலை 7 மணிக்குப் பிறகு, இந்த சம்பவம் குறித்து பேர்ன் கன்டோனல் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பின்னர் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி கதவுகளை திறந்ததால், அதில் இருந்த சுமார் 40 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், பேருந்தும் சேதமடையவில்லை. நிலைமை சீராகிய பிறகு ஓட்டுநர் தனது பயணத்தைத் தொடர்ந்து சென்றார்.

சந்தேகத்திற்கிடமான அந்த நபர் பின்னர் போலீசாரால் தேடப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேலதிக விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், பிரிபோர்க் (Fribourg) கன்டோனில் உள்ள கெர்செர்ஸ் (Kerzers) பகுதியில் அண்மையில் நடைபெற்ற தீவிர தாக்குதலுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தில் ஒரு Autopostale பேருந்து தீவைக்கப்பட்டு ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த புதிய சம்பவம் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது. பேர்ன்-மிட்டெலண்ட் (Bern-Mittelland) பிராந்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் மேற்பார்வையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Kapo BE