அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய மருந்து இறக்குமதி வரிகள், சுவிட்சர்லாந்து பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளக்கூடும் என்று சூரிச் பொருளாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
நிறுவனம் அமெரிக்காவில் தொழிற்சாலை அமைக்காவிட்டால் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகள் மீது அக்டோபர் 1 முதல் 100% வரிகள் விதிக்கப்படும், என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை என்று ETH Zurich பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரும், சூரிச் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநருமான ஹான்ஸ் கெர்ஸ்பாக் தெரிவித்தார்.
“அமெரிக்காவுக்கு செல்லும் மருந்து ஏற்றுமதியின் பெரும்பகுதி இவ்வரிகளுக்குள் வந்தால், மேலும் அவை நீண்டகாலம் நீடித்தால், சுவிட்சர்லாந்து நிச்சயமாக பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது” என்று அவர் எச்சரித்தார்.

முன்னதாக ஆகஸ்ட் 1 அன்று அமெரிக்கா சுவிட்சர்லாந்தின் பல பொருட்களுக்கு 39% வரி விதித்தபோது, அந்த மையம் சில மணி நேரங்களுக்குள் அதன் தாக்கத்தை கணக்கிட்டு, உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 0.3% முதல் 0.6% வரை குறையக்கூடும் என மதிப்பிட்டது.
அப்போது இது “பெரிய அதிர்ச்சி” எனினும், மந்தநிலை தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் மருந்துகளுக்கு வரிகள் விதிக்கப்பட்டால், அது முற்றிலும் மாறுபட்ட சூழலை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுவிட்சர்லாந்தின் இரசாயன மற்றும் மருந்துத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7–8% பங்களிப்பு செய்கிறது. கடந்த சில தசாப்தங்களில் அதிகப்படியான ஏற்றுமதி வளர்ச்சியையும் இந்தத் துறையே வழங்கி வந்துள்ளது.
ரோச் (Roche), நோவார்டிஸ் (Novartis) போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதால் அவை விலக்கு பெறலாம் எனினும், பல சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என கெர்ஸ்பாக் எச்சரித்தார்.
அமெரிக்காவில் மருந்து விலை குறைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், நோவார்டிஸ் திங்கட்கிழமை Cosentyx எனப்படும் தனது சிகிச்சை மருந்தை அமெரிக்க நோயாளிகளுக்கு நேரடியாகக் குறைந்த விலையில் வழங்கும் புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சுவிஸ் பொருளாதாரத்தை பாதிக்கும் டிரம்பின் மருந்து இறக்குமதி வரி