விபத்தை ஏற்படுத்திய தப்பிச்சென்ற பெண் : துரத்திப்பிடித்த 3 போலீசார் படுகாயம்.!
பெர்ன் அருகிலுள்ள வேபர்னில் (Wabern), வெள்ளிக்கிழமை பிற்பகல், தப்பிச் செல்ல முயன்ற ஒரு பெண்ணை தடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். சம்பவம் பிற்பகல் 2.35 மணிக்குப் பிறகு செஃப்டிகென் வீதியில் நடைபெற்றது.
பெர்ன் மாநிலக் காவல்துறை தகவலின்படி, வாகனத்தை நிறுத்தச் செய்யும் நடவடிக்கையின் போது, இரண்டு ரோந்து போலீஸ் வாகனங்களும், மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
முந்தைய நாள், குறித்த பெண், பாதசாரி கடவையில் ஒருவரை மோதி காயப்படுத்தியதாகவும், பின்னர் தப்பிச் சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறார். வெள்ளிக்கிழமை, காவல்துறை ரோந்து குழு அந்த பெண்ணை நிறுத்த முயன்றது. ஆனால், அவர் அதிக வேகத்தில் தப்பிச் சென்றதால், துரத்தல் நடவடிக்கை தொடங்கியது.

வேபர்னில், ஒரு பொதுமக்கள் போல இயங்கும் போலீஸ் கார் சாலையை மறித்தது. ஆனால், அந்த பெண் பிரேக் போடாமல் அந்தக் காரில் மோதினார். பின்னர், பின்நோக்கிச் செல்லும் போது மற்றொரு போலீஸ் காருடனும் மோதி விட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்று பெர்ன் மாநிலக் காவல்துறை வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக, செஃப்டிகென் வீதி முழுவதுமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
@Kapo BE