சுவிட்சர்லாந்தில் கடந்த வசந்த காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க முடிந்ததாக சட்ட மா அதிபர் அலுவலகம் (OAG) அறிவித்துள்ளது.
அட்டார்னி ஜெனரல் ஸ்டீஃபன் பிளாட்லர் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், 18 வயது சுவிஸ் இளைஞர் ஒருவர் தீவிரவாத சிந்தனைகளால் பாதிக்கப்பட்டு, தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவித்தார்.
அந்த இளைஞர் தற்போது முன் விசாரணை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆன்லைனில் வாங்கிய கத்தி ஒன்று போலீசால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், அவருக்கு குற்றமற்றவர் என கருதும் சட்டம் (presumption of innocence) பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சுவிட்சர்லாந்தில் 140-க்கும் மேற்பட்ட பயங்கரவாதச் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இல்லாத அளவிலான உயர்ந்த எண்ணிக்கை இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது சுமார் 120 வழக்குகள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் பிரச்சாரப் பரப்பல், ஜிஹாதி பயணங்கள், தாக்குதல் திட்டமிடல் போன்ற பல்வேறு குற்றங்களைக் கொண்டுள்ளன.
இந்த அபாயத்தை எதிர்கொள்ள, சுவிஸ் நாடாளுமன்றம் ஒரு தனித்துவமான மத்திய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு உருவாக்கும் முன்மொழிவை ஜூன் மாதத்தில் ஒப்புதல் அளித்தது.