Uri கன்டோனில் வங்கி ஊழியர் என நடித்து தொலைபேசி மோசடி – பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் Uri கன்டோனில், சனிக்கிழமை பிற்பகல் பலர் கன்டோன் பொலிசாரை தொடர்புகொண்டு, தொலைபேசி வழியாக நடந்ததாக கூறப்படும் மோசடி முயற்சிகள் குறித்து புகார் அளித்துள்ளனர். தங்களை Urner Kantonalbank நிறுவனத்தின் ஊழியர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை கேட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தவர்களின் கூற்றுப்படி, அந்த நபர்கள், “உங்கள் வங்கி கணக்கில் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன” என கூறி, கணக்கு விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலும், இந்த அழைப்புகள் வரும் போது, தொலைபேசி திரையில் Urner Kantonalbank-க்கு சொந்தமான சரியான தொலைபேசி இலக்கமே தோன்றியதால், பலர் குழப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வகை மோசடிகளில், தொலைபேசி இலக்குகளை போலியாக காட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்தும் கதைகளையும், திறமையான உரையாடல் முறைகளையும் கொண்டு, மக்களை ஏமாற்றி பண இழப்பை ஏற்படுத்துவதே குற்றவாளிகளின் நோக்கமாக இருப்பதாக Uri கன்டோன் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பொலிசார் வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, தொலைபேசி திரையில் தோன்றும் இலக்கத்தை மட்டும் நம்பக் கூடாது, ஏனெனில் அவை எளிதில் போலியாக்கப்படலாம். அழைப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அழைப்பை துண்டிக்க வேண்டும். வங்கிகள் தொலைபேசி வழியாக ஒருபோதும் கடவுச்சொல், PIN எண் அல்லது முழுமையான கணக்கு விவரங்களை கேட்காது என்பதையும், அத்தகைய தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என்பதையும் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அழைப்பாளர்கள் அவசரம் காட்டி அழுத்தம் கொடுத்தால் அதற்கு இடம் கொடுக்காமல், தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்களை வழங்காமல் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபர் கூறும் வழிமுறைகளின் பேரில் எந்த மென்பொருளையும் நிறுவக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி தொடர்பான சந்தேகங்களுக்கு, அழைப்பில் வந்த இலக்கத்தை பயன்படுத்தாமல், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அட்டை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மோசடி முறைகள் குறித்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எச்சரிக்கை வழங்குவது அவசியம் என்றும், இவ்வகை சம்பவம் ஏற்பட்டால் உடனடியாக தங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு, பொலிசில் புகார் அளிக்க வேண்டும் என்றும் Uri கன்டோன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இணைய வழி குற்றங்கள் குறித்த மேலதிக தடுப்பு அறிவுரைகள் மற்றும் தகவல்கள் cybercrimepolice.ch இணையதளத்தில் கிடைக்கும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
© Kapo Uri