சுவிட்சர்லாந்தில் மூன்றாம் நாடுகளுக்கான வேலை அனுமதி அளவுகள் 2026லும் மாற்றமில்லை
சுவிட்சர்லாந்து அரசு, 2026ஆம் ஆண்டில் மூன்றாம் நாடுகளிலிருந்து வரக்கூடிய தகுதி பெற்ற நிபுணர்களுக்கான அனுமதி அளவுகளை முந்தைய ஆண்டைப் போலவே தொடர முடிவு செய்துள்ளது. இதன்படி, அதிகபட்சம் 8,500 வெளிநாட்டு நிபுணர்களை மட்டுமே நாட்டில் பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்படும். இதில் 4,500 பேர் நிரந்தர குடியிருப்பு வகை B அனுமதியும், 4,000 பேர் குறுகிய கால L அனுமதியும் பெற முடியும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் EFTA நாடுகளிலிருந்து வருடத்திற்கு 120 நாட்களுக்கு மேல் சேவை வழங்கும் நிபுணர்களுக்கான அனுமதிகளும் மாற்றமின்றி தொடர்கின்றன. அதிகபட்சம் 3,500 அனுமதிகள் வழங்கப்படலாம்; இதில் 3,000 L அனுமதிகளும், 500 B அனுமதிகளும் அடங்கும்.

“பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியானதைத் தொடர்ந்து தனிப்பட்ட ஒதுக்கீடாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சிய நிபுணர்களுக்கான 3,500 அனுமதிகளும் தொடர்கின்றன. இதில் 2,100 B அனுமதிகள் மற்றும் 1,400 L அனுமதிகள் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து, திறமையான பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க இந்த அனுமதி முறையைப் பயன்படுத்தி வருகிறதுடன், உள்ளூர் வேலை சந்தையைப் பாதுகாக்கும் நோக்கத்தையும் வைத்துள்ளது. IT, மருத்துவம் மற்றும் தொழில்துறை துறைகளில் திறமையாளர் தேவை அதிகரித்து வரும் நிலையிலும், அனுமதி அளவுகளை உயர்த்தாத தீர்மானம் மேலும் விவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.