சுவிஸ் லாண்டில் நடந்த தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா
சுவிஸ் தமிழ்ச் சங்கமும் ,தமிழ் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய இந்த விழா தமிழர்களின் தனித்துவ பண்பாட்டு அடையாளங்களின் சங்கமமாய் அமைந்தது.
கூத்து,இன்னியம் ,ஈழநாட்டியம்,இசை,பரதநாட்டியம்,வில்லிசை,சிலம்பம் தமிழர் கலைகள் சங்கமித்து மகிழ்ந்தன.
சுவிசில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள்,நடனப் பள்ளிகள்,இசைப் பள்ளிகளின் அறுநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வின் நிகழ்த்துகையாளர்களாக இணைந்திருந்தனர்.
பொங்கலிடலுடன் காலை பத்து மணிக்கு தொடங்கிய தமிழர் திருநாள் விழா இரவு எட்டு மணிவரை தொடர்ந்தது.
அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து இப் பெருவிழாவை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த விழாவில் இளையோரின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது தமிழ் மீதும் ஈழத்துக் கலைகள் மீதும் அவர்களுக்கு இருந்த அக்கறை வியக்கத் தக்கது.
எதிர்காலத்தில் புலம் பெயர் தேசங்களில்தான் நமது கலைகளும் மொழியும் செழுமை மிக்கதாக தொடரும் என்பதற்கான நம்பிக்கையை சுவிஸில் நடந்த இந்த தமிழர் திருநாள் விழா மாத்திரமல்ல.தை மாதம் முழுவதும் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, டென்மார்ர்க், அமரிக்கா , அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் தமிழ் மரபுத் திங்களாய் கொண்டாடப் படுகின்றமையும் அதையொட்டி நடைபெறுகின்ற செயல்பாடுகளும் நம்பிக்கை ஒளியாய் கண்ணுக்கு முன் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகிறது.
விழாவின் கலை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன .ஒவ்வொரு குழுவும் தங்கள் அதி திறனை வெளிப்படுத்தியிருந்தனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் தங்கள் பாடசாலைக் கல்வியை, பல்கலைக்கழக உயர் கல்வியை தாங்கள் வாழும் நாட்டின் மொழி வழியாகவே தொடர்கின்றனர்.
அதற்கு மேலதிகமாகவே தமிழ் மொழிக் கல்வியையும் ,தமிழர் கலை வழிக் கல்வியையும் கற்கின்றனர்.
நன்றி :- முகநூல்