செலவைக் குறைக்க இந்திய விமானப்பணியாளர்களை நியமிக்கத் திட்டமிடும் ஸ்விஸ் ஏர்லைன்ஸ்
சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிலிருந்து புதிய விமானப்பணியாளர்களை நியமிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. குறிப்பாக கனடா – மொன்றியல் வழித்தடத்திற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாக சுவிஸ் பத்திரிகை CH Media தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நியமனத்தில், இந்திய விமானப்பணியாளர்களுக்கு மாதம் 65,000 முதல் 1,06,000 ரூபாய் வரையிலான சம்பளம் வழங்கப்படும். இது சுவிஸ் நாணயத்தில் சுமார் 580 முதல் 950 ஃபிராங்க் ஆகும். அதே சமயம், சுவிட்சர்லாந்தில் உள்ள பணியாளர்களின் தொடக்கச் சம்பளம் 3,800 ஃபிராங்கை விட அதிகம் என்பதால், பெரும் வேறுபாடு இருப்பது தெளிவாகிறது.
லுஃப்தான்சாவின் துணை நிறுவனமான சுவிஸ் ஏர்லைன்ஸ், ஏற்கனவே இந்தியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுமார் 230 சர்வதேச விமானப்பணியாளர்களை பணியமர்த்தி வருகிறது. இவர்கள் அனைவரும் சுவிஸ் சீருடை அணிந்தே பணியாற்றினாலும், ஜப்பானிய பணியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு கூட்டு வேலை ஒப்பந்தம் இல்லை. இதனால், அவர்களது சம்பளம் சுவிட்சர்லாந்து பணியாளர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளது.

நிறுவனத்தின் விளக்கத்தில், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்ளூர் மொழி மற்றும் கலாச்சார காரணங்களுக்காகவே வெளிநாட்டு விமானப்பணியாளர்களை நியமிக்கப்படுகிறது. மேலும், இது Kapers தொழிற்சங்கத்துடன் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் Kapers தொழிற்சங்கம், இந்த நடைமுறையை கடுமையாக விமர்சித்து, “இது சம்பளங்களை குறைப்பதற்கான வழக்கமான உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆண்டு முடிவுக்கு முன்னர், நிறுவனத்துடன் மேம்பட்ட வேலைநிலைகளைப் பெற பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் சங்கம் அறிவித்துள்ளது.
© Keystone-SDA