சுவிட்சர்லாந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது: ஐ.நா. பொதுச்சங்கத்தில் அறிவிப்பு
நியூயோர்க்கில் நடைபெற்ற 80வது ஐ.நா. பொதுச்சங்கத்தில், சுவிட்சர்லாந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தன்னுடைய நடுவர் பங்கைக் வகிக்க தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தியது. கூட்டமைப்புத் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இக்னாசியோ காசிஸ் ஊடகங்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தனர். “ஒரு உச்சிமாநாடு மிக அவசியம். சுவிட்சர்லாந்து அதற்குத் தயாராக இருக்கிறது. ஆனால், பங்கேற்பாளர்களை கட்டாயப்படுத்த முடியாது,” என்று காசிஸ் தெரிவித்தார்.
அதே நேரத்தில், காசிஸ், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க சுவிட்சர்லாந்து போதுமான பங்காற்றவில்லை என்ற விமர்சனங்களை நிராகரித்தார். “மனிதாபிமான ரீதியிலும், தூதரக ரீதியிலும், சுவிட்சர்லாந்து உலகின் பெரும்பாலான நாடுகளை விட அதிகமாக செய்கிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.
கூடுதலாக, சுவிஸ் கூட்டாட்சி அரசு, காசாவில் இருந்து நோயுற்ற குழந்தைகளை சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரவேற்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக காசிஸ் விளக்கினார். இதற்கு முன்னர் பிரிட்டன் மற்றும் இத்தாலியும் காசா பகுதியிலிருந்து நோயாளிகளை தங்களது மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளன.

மேலும், சுவிட்சர்லாந்து காசா மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க 100 மில்லியன் ஃபிராங்க் ஒதுக்கியுள்ளது. ஆனால், “இஸ்ரேல் படை பகுதியளவில் தடுக்கும் காரணத்தால், இவ்வுதவிகள் போதுமான அளவில், தொடர்ந்து சென்றடையவில்லை,” என காசிஸ் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவுடன் காசிஸ் குறுகிய சந்திப்பு ஒன்றும் நடத்தியுள்ளார். இதில் அமெரிக்கா–சுவிஸ் சுங்கத் தகராறு குறித்து அல்லாமல், பிற பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், கூட்டமைப்புத் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர், உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதோடு, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸையும் சந்தித்தார். சுவிட்சர்லாந்தின் நிதி பங்களிப்புக்கு குட்டெரஸ் நன்றி தெரிவித்து, ஐ.நா. அமைப்பின் பட்ஜெட் குறைப்புகளுக்கு மத்தியிலும் ஜெனீவா, ஐ.நா. மையமாக தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.
அவர், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர்லேயனையும் சந்தித்து, சுவிஸ்–ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகள் மற்றும் OECD குறைந்தபட்ச வரி தொடர்பான எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்தார். “இது அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளின் போட்டித்திறனைப் பற்றியது. அதில் சுவிட்சர்லாந்தும் அடங்குகிறது,” என்று கெல்லர்-சுட்டர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனையும் சந்தித்தார். சுவிட்சர்லாந்து, அமெரிக்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “பாதுகாப்பு சக்தி” என்ற சிறப்பு பங்கை ஈரானில் வகிப்பதால், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
© KeystoneSDA