பனிப்பொழிவால் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைச் சாலைகள் மூடப்பட்டன
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்ததால் பல முக்கிய மலைச் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. இதனால், அக்டோபர் பள்ளி விடுமுறையில் பயணம் திட்டமிட்டிருக்கும் குடும்பங்களுக்கு சிரமம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவ்வருடம் குளிர்காலத்திற்காக ஏற்கனவே நான்கு முக்கிய மலைக் கடவைகள் மூடப்பட்டுள்ளன. அவை: 2,429 மீட்டர் உயரமுள்ள ஃபுர்கா பாஸ் (Furka Pass), 2,164 மீட்டர் உயரமுள்ள கிரிம்செல் பாஸ் (Grimsel Pass), 2,478 மீட்டர் உயரமுள்ள நுஃபெனென் பாஸ் (Nufenen Pass) மற்றும் 2,234 மீட்டர் உயரமுள்ள சூஸ்டென் பாஸ் (Susten Pass).

இதே நேரத்தில், 1,457 மீட்டர் உயரத்தில் உள்ள ஏக்கெர்லி பாஸ் (Ächerli Pass) மற்றும் 1,558 மீட்டர் உயரமுள்ள பிராகெல் பாஸ் (Pragel Pass) திறந்திருப்பினும், காலநிலைப் பொருத்தமாக மாற்றுப்பாதைகள் தேவைப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரபலமான கோத்தார்ட் பாஸ் (Gotthard Pass) தற்போது திறந்திருக்கும் நிலையில், வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் முன்கூட்டியே தகவல் சேகரித்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சாலைகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டு, வசந்த காலத்தில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். எனவே, இக்காலத்தில் மலைப்பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் முன் போக்குவரத்து நிலையை சரிபார்ப்பது அவசியமாகும்.