பயங்கரவாத தாக்குதல் திட்டம்: சுவிட்சர்லாந்தில் இளைஞருக்கு எதிராக குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவருக்கு எதிராக கூட்டாட்சி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சுவிட்சர்லாந்து கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகம் (Office of the Attorney General – OAG) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி போலீஸ் அமைப்பான Federal Office of Police (fedpol), குறித்த நபர் ஒரு பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம் எனக் காட்டும் தகவல்கள் கிடைத்ததையடுத்து OAG-க்கு குற்றப்பத்திரிகை அளித்தது. அதனைத் தொடர்ந்து OAG வழங்கிய உத்தரவின் பேரில் அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையில் ஆர்காவ் (Aargau) கன்டோனல் போலீசாரும் fedpol அதிகாரிகளுக்கு ஆதரவளித்தனர்.

விசாரணை முடிவடைந்த பின்னர், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறித்த நபர் “இஸ்லாமிக் ஸ்டேட்” (IS) அமைப்பின் பெயரில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாக OAG குற்றம் சாட்டியுள்ளது. அந்த திட்டத்தின் படி, சீரற்ற முறையில் தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள் மீது கத்தி கொண்டு தாக்குதல் நடத்துவது நோக்கமாக இருந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக குறித்த நபர் சில முன்னேற்பாடுகளையும் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் தாக்குதல் நடத்தும் முறைகள் குறித்து தகவல்களை சேகரித்தல், அதே கருத்துக்களைக் கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தல், மத அடிப்படையில் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆதரவு தரும் விளக்கங்களை ஆராய்தல், மேலும் தாக்குதலுக்காக ஏற்ற கத்தியை இணையத்தின் மூலம் ஆர்டர் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கு தற்போது சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றத்தில் (Federal Criminal Court) விசாரணைக்காக செல்லவுள்ளது. இறுதி தீர்ப்பு சட்டபூர்வமாக வழங்கப்படும் வரை குறித்த நபர் குற்றமற்றவர் என்ற முன்னெண்ணமே நடைமுறையில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© SwissInfo