சுவிஸ் அரசியல்வாதி குவெண்டின் டி மேயோ மீது பாலியல் குற்றச்சாட்டு – வழக்கு விசாரணையில்
சுவிட்சர்லாந்தின் நியுஷாட்டெல் மாநிலத்தைச் சேர்ந்த லிபரல் கட்சியின் (PLR) முக்கிய அரசியல்வாதியும், மாநில அமைச்சரவைத் தேர்தலுக்குப் போட்டியிட்டவருமான குவெண்டின் டி மேயோ மீது, சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் 2017 ஆம் ஆண்டு, நியுஷாட்டெல் மாநிலத்தின் ஃப்ளூரியர் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுவிழாவின் போது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது டி மேயோ 24 வயதிலும், குற்றச்சாட்டு எழுப்பிய பெண் 17 வயதிலும் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். குற்றச்சாட்டு இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு முன்பே போலீசார் வதந்திகளின் அடிப்படையில் தொடக்க விசாரணைகளை மேற்கொண்டதாகவும் மாநில பொது வக்கீல் பியர் ஒபேர் செய்தி நிறுவனம் Keystone-ATS-க்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு கடந்த கோடைகாலத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாகவும், தற்போது அதன் காலவரையறை தீர்மானிக்கப்படாத நிலையிலுள்ளது. தேர்தல் காலத்தில், அவரது சில விளம்பர பலகைகள் சேதப்படுத்தப்பட்டு, அவரது முகத்தின்மேல் “பாலியல் குற்றவாளி” என்று எழுதப்பட்டிருந்தது. டி மேயோ அதற்கெதிராக அடையாளம் தெரியாதவர்களுக்கு எதிராக புகார் அளித்திருந்தாலும் பின்னர் அதனை வாபஸ் பெற்றார்.

ArcInfo பத்திரிகையின் தகவலின்படி, டி மேயோ அந்த இளம்பெண்ணை முத்தமிட முயன்றபோது அவள் மறுத்ததால், அவளை சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று, கழுத்தைப் பிடித்து, ஒரு கால்பந்து மைதானம் அருகே பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஆனால் டி மேயோ தனது பதிலில், அந்த இளம்பெண்ணுடன் தனியாக இருந்ததே இல்லை என்றும், அவள் தனது நண்பர் வட்டத்தில் கூட இல்லை என்றும், இக்குற்றச்சாட்டை கேட்டபோது தானும் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
PLR கட்சியின் நியுஷாட்டெல் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை டி மேயோ குற்றமற்றவராகவே கருதப்படுவார் எனவும், தற்போது அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பது “முன்கூட்டியதும், அநியாயமானதுமாகும்” எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தற்போது சுவிட்சர்லாந்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கைக்கும், பொது நெறிமுறைக்கும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
© Keystone ATS