ஸ்விட்சர்லாந்துக்கு கடும் குளிர் அச்சுறுத்தல் – துருவ சுழலின் பலவீனம் காரணமா?
சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் கடந்த வார இறுதியில் வெப்பநிலை -30°C வரை சரிந்தது. நாடு முழுவதும் பரவி காணப்பட்ட இந்த திடீர் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர், வானிலை நிபுணர்கள் எச்சரித்து வரும் பெரிய மாற்றத்தின் முன்னோட்டம் மட்டுமே எனக் கூறப்படுகிறது. அதாவது, துருவ சுழல் (Polar Vortex) எனப்படும் இயற்கை காற்றழுத்த அமைப்பு நிலைத்தன்மை இழந்து பலவீனம் அடையும் அபாயம் ஆகும்.
துருவ சுழல் பொதுவாக வட துருவப்பகுதி குளிரை அடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய காற்று வளையமாகும். ஆனால் அது சிதறினால், அர்க்டிக் பகுதியிலிருந்து கடும் குளிர் காற்று தெற்கே தடை இல்லாமல் பாய்ந்து வர வாய்ப்பு உள்ளது. இந்த நிலை உருவானால் அடுத்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் ஸ்விட்சர்லாந்தின் வானிலை மேலும் மோசமடையக்கூடும் என வானிலை நிபுணர் பீட்டர் விக் எச்சரிக்கிறார்.

அவரின் கூற்றுப்படி, மிகவும் சாத்தியமான நிலைமை என்னவெனில், துருவ சுழல் தளர்வதால் “அர்க்டிக் குளிர் காற்றுக்கான கதவுகள் திறக்கப்பட்டுவிடும்”, இதன் விளைவாக கடும் குளிர் அலை நாட்டை வலம் வரும் சூழ்நிலை உருவாகலாம். ஐரோப்பாவில் கடந்த ஆண்டுகளில் பல முறை காணப்பட்ட திடீர் குளிர் அலைகளுக்கும் இதே காரணமே பின்னணியாக இருந்தது.
இந்த மாற்றம் ஸ்விட்சர்லாந்தின் போக்குவரத்து, மின்சார பயன்பாடு மற்றும் அன்றாட வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் தாக்கத்தைக் கண்டுவரும் ஐரோப்பாவில், அடுத்த சில வாரங்கள் வானிலை எப்படி மாறும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
© KeystoneSDA