பாசல் பள்ளியில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் – மாணவர்களின் பாதுகாப்புக்காக வகுப்புகள் தற்காலிகமாக ரத்து
சுவிட்சர்லாந்தின் பாசல் (Basel) நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு எதிராக அக்டோபர் 18, 2025 சனிக்கிழமை அன்று துப்பாக்கிச் சூடு மிரட்டல் விடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த மிரட்டலை பள்ளி நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து, பாசல்-ஸ்டாட் (Basel-Stadt) மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, திங்கள்கிழமை (அக்டோபர் 20) பள்ளி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படாது, ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், திங்கள்கிழமை அதிகாலை நேரத்திலேயே சந்தேக நபர் யார் என்பது காவல்துறையால் கண்டறியப்பட்டதால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஆலோசனைக்குப் பிறகு, திங்கள்கிழமை மதியத்துக்கு முன் மீண்டும் வழக்கமான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பாசல்-ஸ்டாட் மாநில இளையோர் வழக்கறிஞர் அலுவலகம் தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, சமூக ஊடகங்களில் பள்ளிகள் அல்லது பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படும் மிரட்டல்கள் “விளையாட்டாக” கருதப்பட முடியாது; அவை சட்ட ரீதியாக மிகுந்த தீவிர குற்றமாகப் பார்க்கப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய செயல்கள் உலகம் முழுவதும் அச்சம், துயரம் மற்றும் சமூக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் நினைவூட்டினர்.

சுவிட்சர்லாந்து சட்டத்தின் படி, பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான மிரட்டல்கள் அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. குற்றவாளிகள் சிறைத் தண்டனைக்கும், அதிக நிதி அபராதங்களுக்கும் ஆளாகலாம். இளவயது குற்றவாளிகளுக்கும் அதே சட்டம் பொருந்தும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காவல்துறை, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் முக்கியத்துவத்தை விளக்கி, இத்தகைய மிரட்டல்களின் தீவிர விளைவுகளை உணர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் சில நிமிட “சர்சைக்காக” எழுதப்படும் ஒரு மிரட்டல், ஒருவரின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
© Kapo Basel-Stadt