சுவிற்சரலாந்தில் ராதா நடனாலயத்தின் “சலங்கை நாதம்” நிகழ்வு – 2025
ராதா நடனாலய நிறுவுநர், முதுகலைமாணி திருமதி.ஞானசுந்தரி வாசன் அவர்களின் மாணவிகளான திரு.திருமதி.முரளிதரன் சர்மளாதேவி தம்பதிகளின் புதல்வி செல்வி சமீரா, திரு.திருமதி.சசிகரன் உருத்திரவேணி தம்பதிகளின் புதல்விகளான செல்வி மஞ்சரி, செல்வி சஞ்சனா ஆகியோரின் “சலங்கை நாதம்” நிகழ்வு கடந்த 19.10.2025 சனிக்கிழமை அன்று Salmen Saal, Uitikonerstr 17, 8952 Schleren எனும் முகவரியில் பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமாகி “சலங்கை நாதம்” நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வரவேற்புச் சுடர்களை திரு.திருமதி.சசிகரன் குடும்பத்தினர், திரு.திருமதி.முரளிதரன் குடும்பத்தினர், திரு.திருமதி.வாசன் குடும்பத்தினர், விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர்.
பிள்ளைகள் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு அரங்கில் முனைவர் சோமஸ்கந்த ஶ்ரீகர சர்மா தலைமையில் நடராஜர் பூஜை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து தேவார பண்ணிசையுடன் நடன ஆசிரியர் அவர்களினால் மாணவிகளுக்கு சலங்கை அணியப்பட்டு தொடர்ந்து நடராஜருக்கான விளக்கினை திரு.திருமதி.சந்திரதாஸ் குடும்பம், திருமதி.துரைராணி ஆகியோர் ஏற்றிவைத்தனர். தாயக மண்ணிற்காய் வித்தானவர்கள் நினைவுசுமந்த சுடரினை திரு.வாசன் ஏற்றிவைத்தார். விழாச்சுடரினை பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், நடன ஆசிரியர்கள், பொது அமைப்புகள், உப அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆசியுரையினை முனைவர் சோமஸ்கந்த சர்மா நிகழ்த்தினர். வரவேற்புரையினை திரு.சசிகரன் நிகழ்த்தினார். தொடர்ந்து அரங்கில் செல்வி சமீரா முரளிதரன், செல்வி.மஞ்சரி சசிகரன், செல்வி சஞ்சனா சசிகரன் ஆகியோரின் அரங்க ஆற்றுகைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மல்லாரி தொடங்கி விநாயகர் ஸ்துதி, மாவீரர் வணக்கம், அலாரிப்பு, ஜதிஸ்வரம், கௌத்துவம், கீர்த்தனம். அபிநய நடனம், மயில் கவிதை, தனி நடனம், தாயகப்பாடல், மங்களம் போன்ற உருப்படிகளினால் முதுகலைமாணி திருமதி ஞானசுந்தரி வாசன் அவர்களின் மாணவிகள் மூவரும் அரங்கை கட்டிப்போட்டனர்.
நடன ஆற்றுகைகளுக்கேற்றால் போல் ஓப்பனைகள் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும். சுவிற்சர்லாந்தில் பிறந்த ஈழத்தமிழ் பிள்ளைகளின் அணியிசை நடன ஆற்றுகை மாணவிகளுக்கு மேலும் வலுச்சேர்த்து நின்றது. சிறந்த ஒலி, ஒளி அமைப்புகள் நிகழ்வின் கனதியை உயர்த்தியது.
நிகழ்வின் சிறப்புரைகளை “ஏர் நிலம்” தொண்டமைப்பின் நிறுவுநர் து.திலக்(கிரி), சலங்கை நர்த்தனாலய அதிபர் திருமதி.மங்களநாயகி வசந்தகுமார், பரதாஞ்சலி நடனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.அனுசா சற்குருநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். ஈழத்தமிழ் உறவுகள், நடனாலய மாணவிகள், நடன ஆசிரியர்கள், நண்பர்கள் நலன்விரும்பிகள் என பெருந்திரளான உறவுகள் மத்தியில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அரங்காற்றுகையின் இடையிடையே கலைஞர்கள், விருந்தினர்கள் மதிப்பளிப்பும் நடைபெற்றது.
மகிழ்வுரையினை ராதா நடனாலய நிறுவுநரும் அதிபருமான முதுகலைமாணி திருமதி ஞானசுந்தரி வாசன் அவர்கள் நிகழ்த்தினார். நன்றியுரையினை “சலங்கை நாதம்” நிகழ்வு நாயகிகளான மஞ்சரி சசிகரன், சஞ்சனா சசிகரன், சமீரா முரளிதரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
உணர்வுபூர்வமான அரங்காற்றுகை நிகழ்வுகளுடன் மிக விறுவிறுப்பாக அரங்கை ஆளுகைக்குட்படுத்தியிருந்தமை சலங்கை நாதம் நாயகிகளின் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தி நின்றது. அனைத்து நிகழ்வுகளையும் நேர்த்தியோடும் உணர்வெழுச்சியோடும் திரு.செல்வா கவிதரன் தொகுத்து வழங்கினார். நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
து.திலக்(கிரி),
சுவிஸ்.