ஆர்காவ் கன்டோனில் பரபரப்பு : தீயணைப்பு வீரர்களை தாக்கிய இளைஞர்கள்
Kapo Aargauசுவிட்சர்லாந்தின் ஆர்காவ் கன்டோனில் உள்ள ப்ரிக் நகரில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு இளைஞர்கள், இரண்டு தீயணைப்பு வீரர்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது சம்பவம் தொடர்பாக ஆர்காவ் கான்டன் காவல்துறை சாட்சிகளைத் தேடி வருகிறது.
இந்த சம்பவம் அக்டோபர் 19, 2025, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 1.30 மணியளவில் ப்ரிக்கில் உள்ள (Schulstrasse) பள்ளி வீதியில் நடந்தது. ஒரு பயிற்சியை முடித்த பின்னர், தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், தங்கள் உத்தியோக ஆடையுடன், கால்நடையாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு இருண்ட நிற மின்சார ஸ்கூட்டரில் (E-Roller) பயணித்த இரு இளைஞர்கள் அவர்கள் அருகே வந்து சென்றனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் திரும்பி வந்து தீயணைப்பு வீரர்களை வாய்மூலம் எச்சரித்து மிரட்டல் விடுத்தனர். . இதனை எதிர்த்து, தீயணைப்பு வீரர்கள் அவர்களை அங்கிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், இளைஞர்கள் மீண்டும் திரும்பி வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஓட்டுநர் எனக் கூறப்படும் இளைஞர் சுமார் 18 முதல் 19 வயதுக்குள் இருப்பவர் எனவும், 160–165 செ.மீ. உயரம், மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்தார் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஒருவரின் தாடையைப் பிடித்து, இடது கையால் முகத்தில் பலமுறை அடித்தார். ஸ்கூட்டரில் இருந்த மற்றொரு இளைஞர், சுமார் 19 வயது, இதே அளவிலான உயரம், பழுப்பு நிற முடி, தாடி, சாம்பல் நிற ஹூ அணிந்திருந்தார்; அவர் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.

இரண்டாவது தீயணைப்பு வீரர் தன் சக வீரரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டார். தாக்குதலின் போது அவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். ஆனால், இளைஞர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. பின்னர், ஒருவர் அவசர அழைப்பை (Notruf) செய்ததும், குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.
காயமடைந்த தீயணைப்பு வீரர் அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். காவல்துறை தற்போது தாக்குதலில் ஈடுபட்ட இரு இளைஞர்களின் அடையாளத்தைத் தெளிவுபடுத்த சாட்சிகளின் உதவியை நாடுகிறது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக ஆர்காவ் கன்டோன் காவல்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடப்பது அரிதான சம்பவமாகக் கருதப்படுவதால், இந்த வழக்கு அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
© Kapo AG