சுவிஸ் விமான நிலையங்களில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
சுவிட்சர்லாந்து தனது விமான நிலையங்களில் புதிய Entry-Exit System (EES) எனப்படும் மின்னணு நுழைவு மற்றும் வெளியேற்ற முறையை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த முறை அக்டோபர் 12 முதல் அமலுக்கு வரும் என சுவிஸ் குடிவரவு குடியகல்வு செயலகம் (SEM) அறிவித்துள்ளது.
இம்முறை மூலம், மூன்றாம் தரப்புக் குடிமக்கள் (third-country nationals) பயண ஆவணங்களில் கையால் முத்திரை இடுவதற்குப் பதிலாக மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவர். இது தற்போதைய கைமுறையை மாற்றும்.
நடைமுறைப்படுத்தும் கால அட்டவணை:
- பேசல் மற்றும் ஜெனீவா விமான நிலையங்கள் – அக்டோபர் 12 முதல்
- சூரிச் விமான நிலையம் – நவம்பர் 17 முதல்
- லுகானோ, டியூபென்டார்ஃப் (சூரிச் கன்டன்) மற்றும் பெர்ன் – 2026 மார்ச் மாத இறுதிக்குள்
இந்த முறை தானாகவே அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை கணக்கிடும். இதன் மூலம், குடியேற்ற அதிகாரிகள் தங்கும் காலத்தை மீறியவர்களை கண்டறிய முடியும்.

விசா வழங்கும் அதிகாரிகளும் இதனைப் பயன்படுத்தி பயணிகளின் முந்தைய தங்கும் பதிவுகளை மதிப்பாய்வு செய்ய முடியும்.
உயிர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு:
புதிய முறைமைக்காக முகப்பதிவு மற்றும் விரல் ரேகை போன்ற உயிர் தரவுகள் (biometric data) சேகரிப்பு கட்டாயமாகும்.
இதன் மூலம் அடையாள மோசடிகளைத் தடுக்கும் திறன் உயரும் என சுவிஸ் குடிவரவு குடியகல்வு செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடுமையான சட்ட வரையறைகளின் கீழ், குற்றப் புலனாய்வு அமைப்புகளும் EES தகவல்களைப் பயன்படுத்தி தீவிர குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.யாருக்கு பாதிப்பு இல்லை:
சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU), மற்றும் ஐரோப்பிய சுதந்திர வாணிப சங்கம் (EFTA) நாடுகளின் குடிமக்கள் மற்றும் செல்லுபடியாகும் வசிப்பிட அனுமதி கொண்டவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது.
முத்திரை முறையின் முடிவு:
கடவுச்சீட்டுக்களில் கைமுறையிலான முத்திரை நடைமுறை 2026 ஏப்ரல் 9 முதல் முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு பதிலாக மின்னணு பதிவு மட்டுமே இருக்கும்.
மாற்றக் காலத்தில் (transition period), புதிய முறையில் பதிவு செய்ய வேண்டிய பயணிகளுக்கு நீண்ட காத்திருப்பு நேரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுவிஸ் குடிவரவு குடியகல்வு செயலகம் எச்சரித்துள்ளது.
எனவே, விமான நிலைய நடைமுறைகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.