சுவிட்சர்லாந்தின் Schwyz மாநிலத்தில் மோசடிக்கு எதிராக புதிய பிரச்சாரம் – «Genug Betrug!»
கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் போலி அழைப்புகள், இணைய மோசடிகள், முதலீட்டு ஏமாற்றுகள், வங்கி தொடர்பான ஏமாற்று வேலைகள் அதிகரித்துள்ளன. அதேபோல் (சுவைஸ்) Schwyz மாநிலத்திலும் 2024ஆம் ஆண்டில் மட்டும் 575 மோசடி சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர், ஏனெனில் பலர் வெட்கம் அல்லது பயம் காரணமாக புகார் செய்யாமல் இருப்பது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையைத் தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கவும் Schwyz மாநில போலீசார் “மோசடி போதும்” «Genug Betrug!» என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதன் முக்கிய நோக்கம், மக்கள் மோசடிகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், ஏமாறாமல் பாதுகாப்பாக இருக்கவும் உதவுவதாகும்.

கூட்டாண்மை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இந்த «மோசடி போதும்” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, Schwyz மாநில போலீசார் உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அதோடு, வரும் இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் கிராம மையங்கள் மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகளில் சிறப்பு தகவல் ஸ்டால்கள் அமைத்து மக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தனிப்பட்ட குழுக்களுக்கான சிறப்பு தகவல் கருத்தரங்குகள் மற்றும் உரைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம், பள்ளிகள், மூத்த குடிமக்கள் குழுக்கள், சங்கங்கள் போன்ற பல்வேறு சமூகங்கள் மோசடிகளை அடையாளம் காணும் முறைகளை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடியும்.
© KapoSZ